பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளாத வாக்குச்சாவடி பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை கலெக்டர் அறிவிப்பு

காரணம் இல்லாமல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத வாக்குச்சாவடி பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-10 23:00 GMT
வேலூர், 

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அடுத்தமாதம் (ஆகஸ்ட்) 5-ந் தேதி நடக்கிறது. இதனை தொடர்ந்து வாக்குச்சாவடி பணியாளர்களுக்கான ஆணையை கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான சண்முகசுந்தரம் கணினி முறையில் தேர்வுசெய்து வெளியிட்டுள்ளார். இந்த தேர்தல்பணி நியமன ஆணை அந்தந்த துறை அதிகாரிகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

தேர்தல் பணியாற்ற இருக்கும் வாக்குச்சாவடி பணியாளர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு வருகிற 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை நடக்கிறது. இதனையொட்டி வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு பணிநியமன ஆணையுடன் அவர்கள் வாக்களிக்க ஏதுவாக தேர்தல் பணிச்சான்று வழங்குவதற்கான படிவமும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது.

இதனை வாக்குச்சாவடி அலுவலர்கள் சரிபார்த்து, கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளதை உறுதிசெய்துகொண்டு மேற்படி படிவத்தில் வாக்காளர் பெயர் இடம்பெற்றுள்ள சட்டமன்ற தொகுதி, பாகம் எண், வரிசை எண் ஆகியவற்றினை சரியாக குறிப்பிட வேண்டும். இதனை 14-ந் தேதி பயிற்சி வகுப்புக்கு வரும்போது தவறாமல் எடுத்துவரவேண்டும்.

விண்ணப்பத்தினை முறையாக நிரப்பி வழங்கினால் மட்டுமே தேர்தல் பணிச்சான்று வழங்கப்பட்டு தேர்தல் நாளன்று தான் பணிபுரியும் வாக்குச்சாவடியிலேயே வாக்களிக்க ஏதுவாக அமையும். எனவே அனைத்து வாக்குச்சாவடி பணியாளர்களும் முழுமையாக ஒத்துழைப்பு நல்கி ஜனநாயக கடமையாற்றும்படி கலெக்டர் சண்முகசுந்தரம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் பயிற்சி வகுப்பில் காரணம் இல்லாமல் கலந்துகொள்ளாத வாக்குச்சாவடி பணியாளர்கள் மீது தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்