திருச்சி சரகத்தில் ஒரேநாளில் 10 ரவுடிகள் கைது டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் அதிரடி நடவடிக்கை

திருச்சி சரகத்தில் டி.ஐ.ஜி.பாலகிருஷ்ணன் எடுத்த அதிரடி நடவடிக்கையால் ஒரேநாளில் 10 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-07-10 22:15 GMT
திருச்சி,

திருச்சி சரகத்துக்கு உட்பட்ட அனைத்து ரவுடிகளின் நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்தார். இதனை தொடர்ந்து திருச்சி சரகத்துக்குட்பட்ட திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 8-ந் தேதி இரவு முதல் 9-ந் தேதி இரவு வரை போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதில் திருச்சி மாவட்டத்தில் 2 ரவுடிகளும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 ரவுடிகளும், கரூர் மாவட்டத்தில் 2 ரவடிகளும், பெரம்பலூர் மாவட்டத்தில் 1 ரவுடியும் என ஒரேநாளில் 10 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது திருச்சி மாவட்டம் சமயபுரம் மற்றும் கல்லக்குடி போலீஸ் நிலையங்களிலும், புதுக்கோட்டை நகரம் மற்றும் கணேஷ்நகர் போலீஸ் நிலையங்களிலும், கரூர் மாவட்டத்தில் குளித்தலை மற்றும் வாங்கல் போலீஸ் நிலையங்களிலும், பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் போலீஸ் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு 8 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 2 பேர் மீது நன்னடத்தை பிணையம் பெற வருவாய் கோட்டாட்சியருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ரவுடிகள் மீது மட்டும் அல்லாமல் அவர்களுக்கு உதவுகிற நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சமூகவிரோத செயல்கள் மற்றும் ரவுடிசத்தில் ஈடுபடுபவர்கள் பற்றி பொதுமக்கள் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டியது பொதுமக்களின் கடமையாகும். மேலும், தகவல் கொடுப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும். ரவுடிகள் மீதான நடவடிக்கை தொடரும். அதேநேரம் அவர்கள் மனம் திருந்தி வாழ விரும்பினால் காவல்துறை உதவ முன்வரும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்