பட்டா வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம்: பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது

மேலூர் அருகே பட்டா கேட்டு விண்ணப்பித்த விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-07-11 00:15 GMT

மேலூர்,

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வேப்படப்பு கிராமத்தை சேர்ந்தவர் ஆண்டிச்சாமி. விவசாயியான அவர் தனது நிலத்திற்கு பட்டா கேட்டு கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) மணிமேகலையிடம் மனு அளித்திருந்தார். அதற்கு அவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து ஆண்டிச்சாமி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து ஆண்டிச்சாமிக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனை வழங்கி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்குமாறு தெரிவித்தனர்.

அதன்படி ஆண்டிச்சாமி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கிராம நிர்வாக அலுவலர் மணிமேகலையிடம் கொடுத்தார். அப்போது பணத்தை கிராம நிர்வாக அலுவலர் மணிமேகலை, அவரது புரோக்கர் மலைச்சாமியிடம் கொடுக்க சொல்லி பின்னர் அதனை வாங்கி தனது மேஜை டிராயரில் வைத்தார். இதனை மறைந்து இருந்து கண்காணித்த மதுரை சரக லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியசீலன் தலைமையிலான போலீசார், லஞ்சம் வாங்கிய மணிமேகலையை கையும் களவுமாக பிடித்தனர்.

இதையடுத்து லஞ்சம் வாங்கியது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் மணிமேகலை, புரோக்கர் மலைச்சாமி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்ச வழக்கில் பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்