கிருமாம்பாக்கம் அருகே தனியார் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடி சாலை தடுப்பு சுவரில் மோதியது; மாணவர்கள் உயிர் தப்பினர்

கிருமாம்பாக்கம் அருகே தனியார் பள்ளி வேன் சக்கரங்கள் கழன்று ஓடி சாலை தடுப்பு சுவரில் மோதியது. அதிர்ஷ்டவசமாக அதில் பயணம் செய்த மாணவ-மாணவிகள் காயமின்றி உயிர் தப்பினர்.

Update: 2019-07-10 23:30 GMT
பாகூர்,

புதுவை தேங்காய் திட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு சொந்தமான வேன் நேற்று காலையில் கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு வந்து கொண்டு இருந்தது. அதில் 40-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இருந்தனர்.

கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவமனை அருகே அந்த வேன் வந்த போது எதிர்பாராத விதமாக வேனின் முன்பக்க அச்சு முறிந்து 2 சக்கரங்களும் கழன்று ஓடியது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் நடுவில் இருந்த தடுப்பு சுவரில் மோதி நின்றது.

இதனால் வேனில் இருந்த மாணவ-மாணவிகள் அலறினர். இந்த சம்பவத்தை நேரில் கண்ட அப்பகுதி மக்கள் ஓடி வந்து வேனில் இருந்த மாணவ-மாணவிகளை காப்பாற்றினர்.

அதிர்ஷ்டவசமாக மாணவ-மாணவிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் சில மாணவர்கள் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. அவர்களுக்கு பொதுமக்கள் தண்ணீர் கொடுத்து ஆசுவாசபடுத்தினார்கள். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்துக்குள்ளான பள்ளி வாகனத்தை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

இந்த விபத்து பற்றி பொதுமக்கள் கூறுகையில், கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் தொடங்குவதற்கு முன்பே தனியார் பள்ளி வாகனங்களை போக்குவரத்து துறையினர் பெயரளவில் ஆய்வு செய்து சான்றிதழ் வங்குவதால் இது போன்ற விபத்துகள் அடிக்கடி நடப்பதாக குற்றம் சாட்டினர்.

மேலும் செய்திகள்