கடைக்கு வந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

மிட்டாய் வாங்க கடைக்கு வந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

Update: 2019-07-11 23:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூரை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 66). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ந் தேதி இவரது கடைக்கு மிட்டாய் வாங்க 6 வயது சிறுமி வந்திருந்தாள். அப்போது அந்த சிறுமிக்கு தர்மலிங்கம் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மலிங்கத்தை கைது செய்தனர். மேலும் அவரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் தர்மலிங்கம் ஜாமீனில் வெளியே வந்தார். இது தொடர்பான வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.

5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை

நேற்று இந்த வழக்கை விசாரித்த மகிளா கோர்ட்டு நீதிபதி மலர்விழி தீர்ப்பு அளித்தார். அதில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் சட்டத்தின்படி தர்மலிங்கத்திற்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சாதாரண சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பை வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வினோத்குமார் ஆஜராகி வாதாடினார். மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து தர்மலிங்கம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய, நீதிபதியிடம் ஒரு மாதம் கால அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளதாக அவரது வக்கீல்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்