ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ஐகோர்ட்டு குழுவினர் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் ஐகோர்ட்டு உத்தரவின்படி நியமிக்கப்பட்டுள்ள குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2019-07-11 21:30 GMT
ராமநாதபுரம், 

சமீபத்தில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வெண்டிலேட்டர் செயல்படாததால் பலர் பலியானதாக கூறப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து வெரோனிகாமேரி என்பவர் தொடர்ந்த வழக்கினை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்ய குழு ஒன்றை நியமித்து உத்தரவிட்டது. இதன்படி ஓய்வு பெற்ற அரசு டாக்டர் சோமசுந்தரம் தலைமையில் வக்கீல்கள் சுப்பாராஜ், செந்தில்குமார் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் நேற்று ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆஸ்பத்திரியில் வெண்டிலேட்டர்கள் செயல்படும் விதம், டயாலிசிஸ் கருவிகள் பயன்பாடு போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் சிறப்பு வார்டு, மகப்பேறு வார்டு, சிசு தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்த குழுவினர் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனை பிரிவுகளையும் பார்வையிட்டனர். சலவை பிரிவு பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு விவரங்களை கேட்டறிந்தனர். ரத்த வங்கி, ஆய்வகம், மருந்து பிரிவு போன்றவற்றில் ஆய்வு செய்து குறைகளையும், தேவையான வசதிகளையும் கேட்டறிந்தனர்.

ஆஸ்பத்திரியில் நோயாளிகள், உடன் இருப்பவர்கள், டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு தேவையான கழிப்பறை வசதி உள்ளதா? என்று கேட்டறிந்தனர். மேலும் டாக்டர்கள் பற்றாக்குறை குறித்தும், சிறப்பு மருத்துவர்கள் தேவை குறித்தும் விவரங்களை சேகரித்தனர். ஆஸ்பத்திரியில் பிராண வாயு காலாவதியாகி இருந்ததை கண்டறிந்த ஆய்வு குழுவினர் அதுபற்றி கேட்டபோது ஒருங்கிணைந்த பிராண வாயு வசதிக்கு பதிலாக தனித்தனி பிராண வாயு சிலிண்டர்கள் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். துருவி துருவி விசாரணை மற்றும் ஆய்வு மேற்கொண்ட இந்த ஆய்வு குழு இதுதொடர்பான அறிக்கையை வருகிற 23-ந்தேதி ஐகோர்ட்டில் அளிக்க உள்ளதாக தெரிவித்தனர். இந்த குழுவினருடன் மனுதாரர் வெரோனிகாமேரி, வக்கீல் திருமுருகன் ஆகியோர் உடன் வந்திருந்தனர்.

மேலும் செய்திகள்