ஏர்வாடி அருகே கட்டிட தொழிலாளி கொலை வழக்கு: “முன்விரோதம் காரணமாக 4 பேரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம்” கைதான 3 பேர் பரபரப்பு வாக்குமூலம்

“முன்விரோதம் காரணமாக 4 பேரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம்“ என்று கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் கைதான 3 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Update: 2019-07-11 22:00 GMT
ஏர்வாடி, 

“முன்விரோதம் காரணமாக 4 பேரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம்“ என்று கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் கைதான 3 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

தொழிலாளி கொலை

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள கோதைசேரியைச் சேர்ந்தவர் ஆறுமுகபெருமாள் மகன் செல்வக்குமார் (வயது 29), கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 8-ந் தேதி இரவில் 3 பேர் கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். அந்த கும்பல் பெரும்பத்தை சேர்ந்த முன்னாள் தி.மு.க. ஒன்றிய செயலாளர் காமராஜ் என்பவரை அரிவாளால் வெட்டியது. மேலும் இளந்தோப்பில் உள்ள கனகராஜ் மகன் செல்வக்குமார் என்பவரின் வீடும் சூறையாடப்பட்டது.

இந்த சம்பவங்கள் குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி மஞ்சங்குளத்தை சேர்ந்த சாமிதுரை (21), சுப்பையா (24) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 3 பேரை பிடித்து, ஏர்வாடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

3 பேர் கைது

போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தார். இதில் சாமிதுரை மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவன் குண்டர் தடுப்பு காவலில் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் சாமிதுரை சிறையில் இருந்து வெளியே வந்துள்ளான். சுப்பையா மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன.

பரபரப்பு வாக்குமூலம்

இந்த கொலை தொடர்பாக 3 பேரும் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். அது வருமாறு:-

நாங்குநேரி அருகே உள்ள கீழமலையனேரியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் கட்டிட காண்டிராக்டராக உள்ளார். அவர் நாங்குநேரியில் உள்ள ஒரு கட்டிடத்தை காண்டிராக்ட் எடுத்திருந்தார். அந்த கட்டிடத்தில் கோதைசேரியைச் சேர்ந்த செல்வக்குமார், இளந்தோப்பை சேர்ந்த மற்றொரு செல்வக்குமார் ஆகியோர் கட்டிட தொழிலாளிகளாக வேலை பார்த்தனர். அவர்களிடம் கொலை வழக்கில் கைதாகியுள்ள 16 வயது சிறுவன் கையாளாக வேலை பார்த்து வந்தான். அப்போது அவன் வேலை சரியாக செய்யவில்லை என்று கூறி பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 3 பேரும் திட்டி உள்ளனர். இதுகுறித்து சாமிதுரை, சுப்பையா ஆகியோரிடம் சிறுவன் கூறி வருத்தப்பட்டுள்ளான். இதைத்தொடர்ந்து அந்த 3 பேரையும் வெட்டிக்கொல்ல முடிவு செய்தார்கள். மேலும் ஏற்கனவே டாஸ்மாக் கடை ஒன்றில் சாமிதுரைக்கும், முன்னாள் தி.மு.க. ஒன்றிய செயலாளர் காமராஜூவுக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. அவரையும் தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளனர்.

மதுகுடித்து விட்டு...

சம்பவத்தன்று இரவில் மதுகுடித்து விட்டு அரிவாள்களுடன் மோட்டார் சைக்கிளில் இளந்தோப்பில் உள்ள செல்வக்குமார் வீட்டுக்கு சென்றனர். அங்கு வீட்டில் யாரும் இல்லாததால் அவரது வீட்டை சூறையாடி உள்ளனர். பின்னர் கீழமலையனேரியில் உள்ள பாலகிருஷ்ணன் வீட்டுக்கு சென்றனர். அவரை கொல்ல வீட்டுக்குள் செல்ல முயன்றார்கள். அப்போது வீட்டில் இருந்த நாய்களை அவிழ்த்து விட்டு விட்டு, அவர் வீட்டுக்குள் ஓடி பதுங்கி கொண்டார். நாய்கள் துரத்தியதால் அங்கிருந்து தப்பி விட்டனர்.

பின்னர் பெரும்பத்தில் உள்ள காமராஜ் வீட்டிற்கு சென்றனர். வெளியே நின்று கொண்டு இருந்த அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். ஆனால் அவர் தப்பி வீட்டிற்குள் ஓடினார். அங்கு கூட்டம் கூடியதை பார்த்த 3 பேரும், அவரை அப்படியே விட்டு விட்டு கோதைசேரியில் உள்ள செல்வக்குமார் வீட்டிற்கு சென்றுள்ளனர். அவரது வீடு பகுதியில் அதிகளவில் ஆட்கள் நடமாடி கொண்டு இருந்தனர். இதனால் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மீண்டும் மது குடித்தனர். போதை பொருட்களையும் உட்கொண்டுள்ளனர். சிறிது நேரம் அங்கேயே காத்திருந்தனர். பின்னர் அங்கிருந்து கோதைசேரியில் உள்ள செல்வக்குமார் வீட்டுக்கு சென்றனர். அவர் வீட்டின் அருகில் உள்ள ஒரு சுவரில் அமர்ந்து செல்போனை பார்த்து கொண்டிருந்தார்.

அவரிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டி இருக்கிறார்கள். அவர் தப்பி ஓடினார். ஆனால் துரத்தி சென்று சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளனர்.

இவ்வாறு 3 பேரும் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சிறையில் அடைப்பு

பின்னர் அந்த 3 பேரும் நாங்குநேரி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டனர். மாஜிஸ்திரேட்டு உத்தரவின் பேரில் சாமிதுரை, சுப்பையா ஆகிய 2 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், 16 வயது சிறுவன் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்