மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ.7½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்

சன்னாவூரில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ.7½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் டி.ஜி.வினய் வழங்கினார்.

Update: 2019-07-11 22:45 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சன்னாவூர் (வடக்கு) கிராமத்தில் மக்கள் தொடர்பு நிறைவு நாள் முகாம் நடந்தது. இதற்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். முகாமில் வருவாய்த்துறையின் சார்பில் 43 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 32 ஆயிரத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, மனைவரிப்பட்டா, நத்தம் பட்டா மாற்றம், நிலப்பட்டா மாற்றம், மனைவரிப்பட்டா நகலினையும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 31 ஆயிரத்து 500 மதிப்பில் நலத்திட்ட உதவித்தொகையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 3 நபர்களுக்கு ரூ.15 ஆயிரத்து 750 மதிப்பில் இலவச தையல் எந்திரங்களையும், வேளாண்மைத்துறையின் சார்பில் 4 விவசாயிகளுக்கு ரூ.74 ஆயிரத்து 540 மதிப்பில் வேளாண் இடுபொருட்களும், சுகாதாரத்துறையின் சார்பில் 1 கர்ப்பிணிக்கு ரூ.2 ஆயிரம் மதிப்பில் சத்துணவு பெட்கங்களையும் என மொத்தம் 66 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 55 ஆயிரத்து 790 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வினய் வழங்கினார். முகாமில் வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, தோட்டக் கலைத்துறை, சுகாதாரத்துறை, குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகிய துறைகளின் சார்பாக பொதுமக்கள் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் திட்ட விளக்கு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தரராஜன், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஹேசமந்த்காந்தி, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் சத்தியநாராயணன், உதவி கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) உமாமகேஸ்வரி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி, துணைப்பதிவாளர் (கூட்டுறவுத்துறை) செல்வராஜ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்