ஆசிரியர்களை நியமிக்கக்கோரி பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள் தளி அருகே பரபரப்பு

தளி அருகே ஆசிரியர்களை நியமிக்கக்கோரி பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-07-11 22:30 GMT
தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள ஜவளகிரி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 93 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இது தெலுங்கு மொழி வழி கல்வி பள்ளியாகும். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார். இங்கு வேறு ஆசிரியர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை.

மொத்தம் உள்ள 93 மாணவர்களுக்கும் தலைமை ஆசிரியர் மட்டுமே பாடம் நடத்தி வருகிறார். ஆசிரியர்களே இல்லாததால் மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் நேற்று பள்ளிக்கு திரண்டு வந்து ஆசிரியர்களை நியமிக்கக்கோரி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் உதவி கலெக்டர் குமரேசன், தாசில்தார் பாலசுந்தரம் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இப்பள்ளியில் விரைவில் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்