ஏழ்மை நிலையிலும் போராடிய கறம்பக்குடி மாணவிக்கு திருச்சி மருத்துவக்கல்லூரியில் இடம்

ஏழ்மை நிலையிலும் போராடி படித்த கறம்பக்குடி மாணவிக்கு மருத்துவ படிப்பு கலந்தாய்வில் திருச்சி மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. எளிய மக்களுக்காக பணியாற்றுவேன் என அவர் தெரிவித்தார்.

Update: 2019-07-11 22:45 GMT
கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள பல்லவராயன்பத்தை புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். தொழிலாளி. இவரது மனைவி இந்திராணி. இவர் களது ஒரே மகள் கீர்த்தனா. அரசு ஒதுக்கீட்டின் கீழ் கறம்பக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த கீர்த்தனா அதில், 491 மதிப்பெண் பெற்றார். இதையடுத்து கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 100 சதவீதம் கட்டண சலுகையில் பிளஸ்-2 வகுப்பில் இடம் கிடைத்தது. அங்கு 2016-17-ம் ஆண்டு பிளஸ்-2 தேர்வில் 1,139 மதிப்பெண் பெற்றார். டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்த கீர்த்தனாவுக்கு நீட் தேர்வு சவாலாக இருந்தது. அந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் அவர் பெற்றி பெற முடியவில்லை. வேறு படிப்பில் சேர மனமில்லாத கீர்த்தனா 2017-18-ம் ஆண்டு நீட் தேர்வை எதிர் கொண்டார். அதில் 220 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்தன. இதனால் அரசு கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.

சேவை செய்வேன்

இருப்பினும் மன தளராத கீர்த்தனா விடா முயற்சி தளராத நம்பிக்கையுடனும் ஏழ்மை நிலையிலும் போராடி இந்த ஆண்டு 520 மதிப்பெண் பெற்றார். தற்போது நடைபெற்று வரும் மருத்துவப்படிப்பு கலந்தாய்வில் கீர்த்தனாவிற்கு திருச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இதையறிந்த கிராம மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். லட்சிய உணர்வுடன் முயற்சித்து அரசு மருத்துவ கல்லூரியில் இடம் பெற்ற கீர்த்தனாவுக்கு அப்பகுதி மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து கீர்த்தனா கூறுகையில், எனது முயற்சிக்கு ஊக்கமும், உற்சாகமும் தந்த பெற்றோர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள், கிராமமக்கள் அனைவருக்கும் நன்றி. டாக்டராகி கிராம புற பணியை தேர்வு செய்து எளிய மக்களுக்கு சேவை செய்வேன். இது வெறும் வார்த்தை அல்ல உறுதி மொழி.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்