துறையூர் அருகே குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

துறையூர் அருகே குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2019-07-11 23:00 GMT
துறையூர்,

போதிய மழை இல்லாததால் தமிழகத்தில் வறட்சி நிலவுகிறது. இதனால், குடிநீர் தட்டுப்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதேபோல துறையூர் அருகே உள்ள பகளவாடி கிராமத்தை சேர்ந்த சித்திரை நகர் பகுதியிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

கடந்த 6 மாதமாக இப்பகுதிக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் குடிநீர் கேட்டு நேற்று காலிக் குடங்களுடன் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அதிகாரி பெரியசாமி, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். அதனைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்