அரியமங்கலம் குப்பை கிடங்கில் 4-வது நாளாக பற்றி எரியும் தீயை அணைக்க போராட்டம் பொதுமக்கள் கடும் அவதி

திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் 4-வது நாளாக பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள்.

Update: 2019-07-11 23:00 GMT
திருச்சி,

திருச்சி அரியமங்கலத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இங்கு தினமும் மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் 400 டன் அளவுக்கு சேகரிக்கப்பட்டு வந்தது. இதனால் இங்கு மலை போல் குப்பைகள் தேங்கின.

இதைத்தொடர்ந்து அரியமங்கலம் குப்பை கிடங்கில் குப்பைகள் சேகரிக்கப்படுவதை தவிர்க்கும் பொருட்டு, ஆங்காங்கே பல்வேறு வார்டுகளில் நுண்உரம் செயலாக்க மையம் தொடங்கப்பட்டு, குப்பை கழிவுகள் உரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கடந்த 8-ந் தேதி அரியமங்கலம் குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்தது. தீ மள,மளவென பரவி வேகமாக எரிய தொடங்கியது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் காற்றின் வேகத்தில் தீ பரவி கொண்டே இருப்பதால் தீயை எளிதில் அணைக்க முடியாமல் சிரமம் ஏற்பட்டது.

இதனால் திருச்சி மட்டுமின்றி அருகே உள்ள மாவட்டங்களான தஞ்சை, பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் இருந்தும் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் சுழற்சி முறையில் இரவு, பகலாக தீயை அணைக்க போராடி வருகிறார்கள்.

மேலும் இந்த தீ காரணமாக அந்த பகுதியில் கரும்புகை கிளம்பியது. இதனால் திருச்சி-தஞ்சை சாலை மற்றும் அரியமங்கலத்தை சுற்றியுள்ள பகுதிகள் புகைமண்டலமாக மாறியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மூச்சுத்திணறல் ஏற்பட்டு மிகவும் அவதி அடைந்து வருகிறார்கள்.

அத்துடன் அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் போன்றவை ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் ஒரு சில நிறுவனங்கள் மூடப்பட்டன. பெரும்பாலான மக்கள் வீடுகளை பூட்டிவிட்டு அருகில் உள்ள உறவினர் வீடுகளுக்கு சென்று விட்டனர்.

நேற்று தொடர்ந்து 4-வது நாளாக தீயை அணைக்க வீரர்கள் போராடினார்கள். இதற்கிடையே குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் புகையால் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். மேலும் அரியமங்கலம் குப்பை கிடங்கை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் நேற்று பார்வையிட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர். குப்பை கிடங்கை சுற்றியுள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.

மேலும் செய்திகள்