அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா

பெருமாநல்லூருக்குட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-11 21:45 GMT
திருப்பூர்,

பெருமாநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பொடாரம்பாளையம், ரோஜா கார்டன், சிவசக்திநகர், லோட்டஸ் கார்டன், மகாலட்சுமிநகர், சன்சிட்டி, பெருமாநல்லூர் தெற்குவீதி, காமாட்சியம்மன் கார்டன், ஈ.பி.காலனி, வலசுபாளையம், வெல்டன் சிட்டி, கணபதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் குடியிருந்து வருகின்றனர். இந்த பகுதிகளில் இதுவரை அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும், உடனடியாக அடிப்படை வசதிகளை செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிசாமி தலைமையில் ஏராளமானோர், திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர்.

அவர்கள் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், எங்கள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதை சீரமைக்க வேண்டும். முறையான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும்.

குப்பைகள் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. உடனடியாக குப்பைகளை அள்ள வேண்டும். தெருவிளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினார்கள். தொடர்ந்து, அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து மனு கொடுக்கவும் தீர்மானித்திருந்தனர். ஆனால், அதிகாரிகள் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்கு சென்றிருந்தனர்.

இதனால் மனு கொடுக்க வந்திருந்தவர்கள் விரைந்து வராவிட்டால் சாலை மறியலில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். நீண்ட நேரத்திற்கு பின்னர் அங்கு வந்த அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொடுத்தனர்.

மேலும் செய்திகள்