உடுமலை வனப்பகுதியில் யானை தாக்கி வாலிபர் பலி

உடுமலை அருகே வனப்பகுதியில் யானை தாக்கியதில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-07-11 22:15 GMT
தளி,

திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகம் குழிப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 25). இவர் கடந்த 9-ந் தேதி இரவு தனது நண்பர்களுடன் மோட்டார்சைக்கிளில் மாவட்டப்பில் இருந்து குழிப்பட்டியை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவரது மோட்டார்சைக்கிள் சடையம்பாறை பகுதியில் சென்றுகொண்டிருந்தது.

அப்போது அங்குள்ள மூங்கில் காட்டில் உணவு மற்றும் தண்ணீருக்காக 2 யானைகள் குட்டியுடன் முகாமிட்டு இருந்தது. மோட்டார்சைக்கிள் சத்தத்தால் மிரண்ட யானைகள் திடீரென மூங்கில் காட்டில் இருந்து வெளியே வந்தன. இதை சற்றும் எதிர்பாராத பழனிச்சாமி நிலைதடுமாறி வாகனத்தில் இருந்து நண்பர்களுடன் கீழே விழுந்தார்.

அப்போது அவரது நண்பர்கள் சுதாரித்துக்கொண்டு எழுந்து தப்பித்து ஓடிவிட்டனர். பழனிச்சாமி மோட்டார்சைக்கிளில் சிக்கிக்கொண்டார். இதன் காரணமாக ஒரு யானை பழனிச்சாமியை துதிக்கையால் தூக்கி வீசியது. இந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர், வருவாய்துறையினர், தளி போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதன் பின்பு பழனிச்சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப அதிகாரிகள் உத்திரவிட்டனர்.

ஆனால் அங்கு வந்த மலைவாழ் மக்கள் பிரேத பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை இருந்தால் மட்டுமே நிவாரணநிதி வழங்க முடியும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். ஆனாலும் சமுதாய வழக்கப்படி பழனிச்சாமியின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்வதற்கு அனுமதிக்குமாறு மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதைத்தொடர்ந்து வேறு ஒரு நிதியிலிருந்து முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் இழப்பீடு பழனிச்சாமி குடும்பத்தினரிடம் வழங்கியதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இது குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்