காவலர் குடியிருப்பு வளாகத்தில் துணிகரம்: போலீஸ்காரர் வீட்டில் திருட முயன்ற 4 பெண்கள் கைது திருப்பூரில் பட்டப்பகலில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு

திருப்பூரில் பட்டப்பகலில் காவலர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள போலீஸ்காரர் வீட்டில் புகுந்து திருட முயன்ற 4 பெண்களை போலீசார் கைது செய்தனர். இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-07-11 22:30 GMT
திருப்பூர்,

திருப்பூர் கோர்ட்டு ரோடு போலீஸ் லைன் முதல் வீதியில் காவலர் குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்கள். இந்த வளாகத்தில் ‘ஜே’ பிளாக்கில், மாநகர ஆயுதப் படையில் போலீஸ்காரராக பணியாற்றும் சேதுபதி தனது குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். நேற்று மதியம் 1 மணி அளவில் சேதுபதியின் மனைவி கனகா(வயது 28) வீட்டின் முன்பக்க கதவை திறந்து வைத்து விட்டு, சமையலறையில் சமையல் பணியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது வீட்டின் படுக்கை அறையில் சத்தம் கேட்டுள்ளது. உடனே அவர் படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது 4 பெண்கள் பீரோவை திறந்து துணிகளை எடுத்துக்கொண்டு இருந்துள்ளனர். அவர்களை பார்த்து, யார் நீங்கள்?. எதற்காக வந்துள்ளீர்கள்? என்று சத்தம் போட்டதும் 4 பெண்களும் அவரை தள்ளி விட்டு வெளியே ஓடினார்கள்.

இதைப்பார்த்து கனகா, திருடி, திருடி என்று சத்தம் போட அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து 4 பெண்களையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் திருப்பூர் வீரபாண்டி அருகே பலவஞ்சிப்பாளையத்தை சேர்ந்த முருகேசனின் மனைவி பவானி(வயது23), செல்வமணியின் மனைவி ராணி(22), தேவாவின் மனைவி சந்தியா(21), நீலகண்டனின் மகள் செல்வி(21) என்பதும், அவர்கள் போலீஸ்காரரின் வீட்டுக்குள் புகுந்து திருட முயன்றதும் தெரியவந்தது.

கனகாவின் வீட்டில் எந்த பொருட்களும் திருட்டு போகவில்லை. இதுகுறித்து கனகா அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம், சப்-இன்ஸ்பெக்டர் சாம் ஆல்பர்ட் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து 4 பெண்களையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். காவலர் குடியிருப்பு வளாகத்தில் புகுந்து பட்டப்பகலில் போலீஸ்காரர் வீட்டில், 4 பெண்கள் திருட முயன்ற துணிகர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்