அனைவரும் கட்டாயம் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா அதிரடி உத்தரவு

அனைவரும் கட்டாயம் சட்டசபை கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2019-07-11 22:30 GMT
அனைவரும் கட்டாயம் சட்டசபை கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா அதிரடி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை மீறும் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்று சட்டசபை கூட்டம்

கர்நாடகத்தில் 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு உச்சகட்ட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது.

அடுத்தடுத்து எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் சட்டசபை கூட்டம் தொடங்குமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் சபாநாயகர் ரமேஷ்குமார், எக்காரணம் கொண்டும் சட்டசபை கூட்டத்தொடர் தள்ளிவைக்கப் படாது என கூறினார். இதனால் திட்டமிட்டப்படி இன்று கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குவது உறுதியாகிவிட்டது.

கொறடா உத்தரவு

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடா கணேஷ் ஹுக்கேரி நேற்று மாலை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். அதாவது, நாளை (அதாவது இன்று) தொடங்கும் கர்நாடக சட்டசபை கூட்டத்தொடரில் அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இந்த உத்தரவு தொடர்பான நோட்டீசு பதவி விலகிய 16 எம்.எல்.ஏ.க்களின் விதானசவுதா வளாகத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் தங்கும் விடுதிகளில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறைகள் முன்பு ஒட்டப்பட்டுள்ளது.

கொறடா உத்தரவை மீறும் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யவும் காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்