நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2019-07-11 23:00 GMT
நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம் பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் கடந்த மே மாதம் 6-ந் தேதி மரவாபாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர்கள் கரூர் மாவட்டம் மண்மங்கலம் பகுதியை சேர்ந்த அசோக் (வயது 20), தினகரன் (23), பாரதிராஜா (28) என்பதும், அவர்கள் நல்லூர், புளியம்பட்டி, காரைக்கால் பிரிவு சாலை மற்றும் கரூர் மாவட்டம் ஏம்பூர், குட்டக்காடு பகுதிகளில் நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரையும் கைது செய்த பரமத்தி போலீசார் அவர்களிடம் இருந்து திருட்டு போன 33½ பவுன் நகைகளை மீட்டனர். பின்னர் அவர்கள் 3 பேரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் தொடர்ந்து நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

அவரது பரிந்துரையை ஏற்று கலெக்டர் ஆசியா மரியம், அசோக் உள்பட 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான நகலை சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள 3 பேரிடமும் பரமத்தி போலீசார் நேற்று ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்