மாவட்டத்தில் மக்கள் தொகை 38 லட்சமாக உயர்வு கருத்தரங்கில் கலெக்டர் ராமன் தகவல்

சேலம் மாவட்டத்தில் மக்கள் தொகை 38 லட்சமாக உயர்ந்துள்ளதாக கருத்தரங்கில் கலெக்டர் ராமன் தெரிவித்தார்.

Update: 2019-07-11 22:45 GMT
சேலம், 

சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கருத்தரங்கு நேற்று நடந்தது. சேலம் சோனா கல்லூரி வளாகத்தில் தொடங்கிய இந்த ஊர்வலத்தை கலெக்டர் ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கலெக்டர் தலைமையில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கல்லூரியில் கருத்தரங்கு நடைபெற்றது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். சோனா கல்விக்குழும தலைவர் வள்ளியப்பா முன்னிலை வகித்தார். கருத்தரங்கில் கலெக்டர் ராமன் பேசியதாவது:-

இந்தியாவில் தற்போது மக்கள் தொகை 136 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த மக்கள் தொகை பெருக்கம் கடந்த 50 ஆண்டுகளில் அதிகளவு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் மக்கள் தொகை 38 லட்சத்து 20 ஆயிரமாக உயர்ந்து விட்டது. கல்வி அறிவு விகிதம் ஆண் 80.2, பெண் 65.2 சதவீதம் ஆகும். மாவட்டத்தில் 4,500 பிரசவங்கள் மாதந்தோறும் நடைபெறுகிறது.

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் 3,500 பேருக்கு நடத்தப்படுகிறது. மக்கள் தொகை பெருக்கத்துக்கேற்ப வாழ்வதற்கான அடிப்படை கட்டமைப்புகள் தேவைப்படுகிறது. குறிப்பாக தண்ணீர் தேவைப்படுகிறது. குடிநீர் தட்டுப்பாடு இருப்பதால் நீராதாரங்களை பெருக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கருத்தரங்கில் இணை இயக்குனர் (மருத்துவ நலப்பணிகள்) சத்யா, துணை இயக்குனர்(குடும்ப நலம்) வளர்மதி, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க மாவட்ட திட்ட மேலாளர் அருணாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்