கட்டண குறைப்பு எதிரொலி பெஸ்ட் பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

கட்டணம் குறைக்கப்பட்டதை அடுத்து பெஸ்ட் பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

Update: 2019-07-11 22:45 GMT
மும்பை,

கட்டணம் குறைக்கப்பட்டதை அடுத்து பெஸ்ட் பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

மும்பையில் பெஸ்ட் நிர்வாகம் பஸ்களை இயக்கி வருகிறது. இதில் பயணிகளை கவர பெஸ்ட் பஸ் கட்டணத்தை அதிரடியாக குறைத்தது. தற்போது மும்பையில் ரூ.5 கொடுத்து 5 கி.மீ. தூரத்துக்கு பெஸ்ட் பஸ்சில் பயணம் செய்ய முடியும். பெஸ்ட் பஸ் கட்டண குறைப்புக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்து உள்ளது.

கட்டண குறைப்பு அமலுக்கு வந்த கடந்த செவ்வாய்க்கிழமை 22 லட்சத்து 18 ஆயிரத்து 253 பேர் பெஸ்ட் பஸ்சில் பயணம் செய்து உள்ளனர். அதற்கு முந்தைய நாளில் 17 லட்சத்து 15 ஆயிரத்து 440 பேர் மட்டுமே பயணம் செய்து இருந்தனர்.

எனவே கட்டண குறைப்பு அமலுக்கு வந்த முதல் நாளே பெஸ்ட் பயணிகளின் எண்ணிக்கை 5 லட்சம் வரை அதிகரித்து உள்ளது.

வருவாய் குறைந்தது

பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது ஒருபக்கம் இருந்தாலும், கட்டண குறைப்பு காரணமாக பெஸ்ட் நிர்வாகத்துக்கு கிடைத்த வருமானம் குறைந்து உள்ளது.

கடந்த திங்கட்கிழமை 17 லட்சத்து 15 ஆயிரத்து 440 பேர் பயணம் செய்த போதும் ரூ.2 கோடியே 12 லட்சத்து 33 ஆயிரத்து 260 வருவாயாக கிடைத்து இருந்தது. ஆனால் கடந்த செவ்வாய்க்கிழமை பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தபோதும், வருவாயாக ரூ.1 கோடியே 45 லட்சத்து 34 ஆயிரத்து 697 மட்டுமே கிடைத்து உள்ளது.

கூவி, கூவி பயணிகளை அழைக்கும் ஊழியர்கள்...

ஸ் கட்டண குறைப்பை பொது மக்களுக்கு விளம்பரப்படுத்தும் வகையில் பெஸ்ட் ஊழியர்கள் பதாகைகளுடன் ரெயில்நிலையம், மார்க்கெட், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் உள்ள பஸ் நிறுத்தங்கள் அருகில் நிற்கின்றனர்.

அவர்கள் டிக்கெட் 5 ரூபாய் தான், 5 ரூபாய் தான் என கூவி, கூவி... பெஸ்ட் பஸ்சில் பயணம் செய்ய பொது மக்களை அழைக்கின்றனர். பஸ் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பெஸ்ட் ஊழியர்கள் செய்யும் முயற்சிகளை பலரும் பாராட்டி உள்ளனர்.

பெஸ்ட் ஊழியர்கள் பயணிகளை கூவி, கூவி அழைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வருகிறது.

மேலும் செய்திகள்