உலக மக்கள்தொகை தினத்தையொட்டி கல்லூரி மாணவ, மாணவிகளின் கண்கவர் ஊர்வலம்

உலக மக்கள்தொகை தினத்தையொட்டி கல்லூரி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2019-07-11 22:45 GMT
புதுச்சேரி, 

புதுவை அரசின் சுகாதாரத்துறை சார்பில் உலக மக்கள்தொகை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி போட்டி நடந்தது. செஞ்சிசாலை பாரதிதாசன் திடலில் இருந்து கல்லூரி மாணவ, மாணவிகள் அணிவகுத்து வந்தனர். அவர்கள் தங்கள் கைகளில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி வந்தனர். மேலும் மேளதாளம், கோலாட்டம், கரகாட்டம் என மாணவ, மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வந்தனர்.

ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று கடற்கரை காந்தி சிலை அருகே முடிந்தது. அங்கு சிறந்த ஊர்வலத்தை நடத்திய கல்லூரிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதன்படி முதல் பரிசை ராக் கல்லூரியும், 2-வது பரிசை ஏ.ஜி. பத்மாவதி கல்லூரியும், 3-வது பரிசை இந்திராணி கல்லூரியும் பெற்றன. ஈஸ்ட்கோஸ்ட், மதர் தெரசா கல்லூரிகளுக்கு ஆறுதல் பரிசு கிடைத்தது.

பரிசுகளை புதுவை அரசு ஆஸ்பத்திரியின் மருத்துவ கண்காணிப்பாளர் வாசுதேவன் வழங்கினார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள் அல்லிராணி, முருகன், ரகுநாதன், சுந்தர்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்