மதுரை அருகே வீடு இடிந்து 4 பேர் பலி, ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம் - அதிகாரியின் கையெழுத்தை போட்டு கட்டிட அனுமதி வழங்கியது அம்பலம்

மதுரை அருகே மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 4 பேர் பலியான சம்பவம் தொடர்பாக ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் அதிகாரியின் கையெழுத்தை போட்டு கட்டிட அனுமதி போலியாக வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

Update: 2019-07-11 22:45 GMT
மதுரை,

மதுரை அருகே உள்ள செக்கானூரணி அ.கொக்குளம் ஊராட்சியில் கட்டுமான பணி நடந்து கொண்டு இருந்த 2 மாடிகளை கொண்ட வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 4 பேர் இறந்தனர். இதைத்தொடர்ந்து கட்டிட உரிமையாளர் மாதவன் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உதவி இயக்குனர் (பஞ்சாயத்து) செல்லத்துரைக்கு, மதுரை மாவட்ட கலெக்டர் ராஜசேகர் உத்தரவிட்டார். அவர் இது குறித்து விசாரணை நடத்தி, தனது அறிக்கையை கலெக்டரிடம் வழங்கினார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அ.கொக்குளம் ஊராட்சியில், உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத சூழ்நிலையில் சிறப்பு அதிகாரியான வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் இதுவரை 52 கட்டிட வரைப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் 5 கட்டிடங்களுக்கான அனுமதி, வட்டார வளர்ச்சி அலுவலரின் கையெழுத்தை போலியாக போட்டு வழங்கப்பட்டு உள்ளது. அதில் ஒன்று தான், இடிந்து விழுந்த கட்டிடத்துக்கான அனுமதி. மற்ற 4 கட்டிடங்களின் கட்டுமான பணியை உடனே நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை தொடர்ந்து, ஊராட்சி செயலர் காசிமாயனை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் ராஜசேகர் உத்தரவிட்டுள்ளார். போலியாக தயாரித்து கட்டிட அனுமதி அளிக்கப்பட்ட விவகாரம் அம்பலமாகி இருப்பது, செக்கானூரணி பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்