மேட்டுப்பாளையம் அருகே பரிதாபம், பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு

மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-07-11 22:45 GMT
மேட்டுப்பாளையம், 

கோவையை அடுத்த வெள்ளலூர் தலைவர் தோட்டம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவரது மகன் பிரமோஜ் (வயது 19). இவர் கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று பிரமோஜ் தனது வகுப்பில் படிக்கும் நண்பர்கள் 11 பேருடன் உக்கடத்தில் இருந்து மோட்டார் சைக்கிள்களில் மேட்டுப்பாளையத்திற்கு சென்றார்.

பின்னர் மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறை-விளாமரத்தூர் அடுத்து உள்ள குண்டுக்கல்துறை பவானி ஆற்றில் அவர்கள் குளித்தனர். அப்போது பிரமோஜ் திடீரென ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில் அவர் ஆற்றில் மூழ்கி தத்தளித்தப்படி உயிருக்கு போராடினார். இதனைகண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் பிரமோஜ் சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கினார்.

இதையடுத்து, மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதனைதொடர்ந்து பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழிவேல், சப்-இன்ஸ்பெக்டர் திலக், ஏட்டு தங்கவேல் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் ஆற்றில் மூழ்கிய மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1½ மணி நேர போராட்டத்திற்கு பிறகு பிரமோஜை பிணமாக மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

மேட்டுப்பாளையம் அடுத்துள்ள குண்டுக்கல்துறை பவானி ஆற்றுக்கு செல்லும் பிரிவில் ஆபத்தான பகுதி என்று காரமடை போலீசார் சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. அதனை வெளியூரில் இருந்து வரும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் யாரும் கண்டு கொள்வதில்லை. ஆற்றில் குளிக்க செல்பவர்களிடம் அப்பகுதி மக்கள் அறிவுரை வழங்கினாலும் அவர்கள் கேட்பதில்லை. இதனால் குண்டுக்கல்துறை பவானி ஆற்றில் மூழ்கி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு நிரந்தரமாக தீர்வுகாண சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்