குடியாத்தத்தில் போலி நகையை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்டவர் கைது திருச்சியை சேர்ந்தவர்

குடியாத்தத்தில் போலி நகையை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-07-12 22:45 GMT
குடியாத்தம், 

வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் உள்பட பல இடங்களில் ஒருவர் உள்ளூர் முகவரி அளித்து நகைக்கடைகளில் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியாத்தம் நகை மற்றும் அடகுக்கடை வியாபாரிகள் சங்க தலைவர் ஜி.சதாசிவம் கடைக்கு அந்த நபர் வந்து உள்ளூர் முகவரி அளித்து மோதிரங்களை அடகு வைக்க கொடுத்தார். அந்த நகைகளை சோதித்தபோது போலி நகை என்பது தெரியவந்தது. சதாசிவம் மோதிரத்தை சோதித்ததை பார்த்த அந்த நபர் நைசாக அங்கிருந்து சென்று விட்டார். கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா மூலம் அந்த நபரின் படத்தை சதாசிவம் அனைத்து நகை மற்றும் அடகு கடை வியாபாரிகளுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி உள்ளார்.

இந்த நிலையில் அந்த நபர் நேற்று காலை குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு நகைக்கடைக்கு வந்து உள்ளூர் முகவரி அளித்து மோதிரங்களை அடகு வைக்க கொடுத்துள்ளார்.

அப்போது கடை உரிமையாளர் அந்த நபரின் மீது சந்தேகம் கொண்டு ஏற்கனவே வாட்ஸ்அப்பில் வந்த படத்தை பார்த்தபோது மோசடி நபர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து நகைக்கடை உரிமையாளர் குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன், தனிப்பிரிவு ஏட்டு அரிதாஸ் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று அந்த நபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் திருச்சியை அடுத்த இனாம்கொளத்தூர் பகுதியை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவரின் மகன் ஜோசப் (வயது 45) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து போலி மோதிரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோசப்பை கைது செய்தனர்.

மேலும் இந்த நபர் தனியாக மோசடி செய்து வந்தாரா? அல்லது கூட்டாளிகளுடன் இணைந்து இதுபோன்ற மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்