மனைவியை கொலை செய்த லாரி டிரைவருக்கு ஆயுள் தண்டனை திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு

மனைவியை கொலை செய்த லாரி டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

Update: 2019-07-12 23:00 GMT
திருவண்ணாமலை,

கலசபாக்கம் அருகில் உள்ள தென்பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜா, (வயது 41) லாரி டிரைவர். இவர் தென்பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த அம்மு (20) என்பவரை காதலித்து 2-வதாக திருமணம் செய்து கொண்டார். ராஜா அவரது 2-வது மனைவி அம்முவை திருவண்ணாமலை அண்ணாநகர் மாரியம்மன் கோவில் தெருவில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து குடியமர்த்தினார்.

ராஜா மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவதால் கணவன், மனைவிக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2008-ம் ஆண்டு மே மாதம் 26-ந் தேதி மீண்டும் கணவர், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த ராஜா அவரது மனைவி அம்மு மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பியோடி விட்டார். அம்முவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர்.

மேலும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் பலத்த தீக்காயம் அடைந்த நிலையில் இருந்த அம்முவை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

பின்னர் மறுநாள் (27-ந் தேதி) மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.

நீதிபதி விஜயராணி நேற்று இந்த வழக்கை விசாரித்து, மனைவியை தீ வைத்து கொளுத்தி கொலை செய்த ராஜாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அபராதத்தொகை கட்டத்தவறினால் கூடுதலாக 2 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கூறினார்.

இதையடுத்து ராஜாவை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் செய்திகள்