ஏரல் நகர பஞ்சாயத்து எல்லையை 15 நாட்களில் அளவீடு செய்ய ஏற்பாடு சமாதான பேச்சுவார்த்தையில் முடிவு

ஏரல் நகர பஞ்சாயத்து எல்லையை 15 நாட்களில் வரையறை செய்து அளந்திட ஏற்பாடு செய்யப்படும் என்று சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Update: 2019-07-12 22:00 GMT
ஏரல், 

ஏரல் நகர பஞ்சாயத்து எல்லையை 15 நாட்களில் வரையறை செய்து அளந்திட ஏற்பாடு செய்யப்படும் என்று சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சமாதான பேச்சுவார்த்தை

ஏரல் நகர பஞ்சாயத்து பகுதியின் நான்குபுறமும் எல்லைகள் வரையறை செய்யப்படாததால், நகர பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே ஏரல் நகர பஞ்சாயத்து எல்லைகளை வரையறை செய்து அளந்திட வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து ஏரல் தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது.

மண்டல துணை தாசில்தார் சேகர் தலைமை தாங்கினார். நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் சங்கர், வட்ட வழங்கல் அலுவலர் கோபாலகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் முத்துலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் திருமணிசெல்வம், முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர்கள் எட்வர்டு, பாலகிருஷ்ணன், முஸ்லிம் வணிகர் நலச்சங்க தலைவர் பாக்கர் அலி, அனைத்து வியாபாரிகள் சங்க துணை தலைவர் தர்மராஜ், பொருளாளர் வில்சன் வெள்ளையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

15 நாட்களில்...

கூட்டத்தில் ஏரல் நகர பஞ்சாயத்து பகுதியானது சிறுத்தொண்டநல்லூர், வாழவல்லான் வருவாய் கிராமங்களை உள்ளடக்கியது. எனவே மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்று, 15 நாட்களில் ஏரல் நகர பஞ்சாயத்து பகுதியின் நான்கு புறமும் உள்ள எல்லைகளை வரையறை செய்து அளந்திட ஏற்பாடு செய்யப்படும். பின்னர் அந்த எல்லைகளை பின்பற்றி செயல்படுமாறு பத்திரப்பதிவு துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறைக்கு அறிவுறுத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்