திண்டுக்கல்லில், டேங்கர் லாரிக்குள் இறங்கி ஆயில் கழிவை சுத்தம் செய்த 2 பேர் மயக்கம்

திண்டுக்கல்லில் டேங்கர் லாரிக்குள் இறங்கி ஆயில் கழிவை சுத்தம் செய்த 2 தொழிலாளர்கள் மூச்சுத் திணறி மயங்கி விழுந்தனர்.

Update: 2019-07-12 22:30 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல்-நத்தம் சாலையில் தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இங்கு ஒரு தனியார் ஆயில் சுத்திகரிப்பு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஆயிலை வாங்கி வந்து சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இதற்காக கோவை, ஈரோடு உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து டேங்கர் லாரிகளில் ஆயில் கொண்டு வரப்படுவது வழக்கம்.

இந்த தொழிற்சாலையில் கொடைரோடு அருகேயுள்ள செட்டியபட்டியை சேர்ந்த முருகேசன் (வயது 50), திண்டுக்கல் கிழக்கு மரியநாதபுரத்தை சேர்ந்த செல்வராஜ் (70) ஆகியோர் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஒரு டேங்கர் லாரியில் ஆயில் கொண்டு வரப்பட்டது. பின்னர் லாரியில் இருந்த ஆயில் இறக்கப்பட்டது. அதேநேரம் லாரியின் டேங்கரில் ஆயில் கழிவுகள் தேங்கி இருந்தது.

இதையடுத்து முருகேசன் லாரியின் டேங்கருக்குள் இறங்கி, கழிவை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அவர் மயங்கி விழுந்தார். இதை அறிந்ததும் செல்வராஜ், முருகேசனை மீட்பதற்காக டேங்கருக்குள் சென்றார். அவரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கினார். இதைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் டேங்கருக்குள் இறங்கி 2 பேரையும் மீட்டனர்.

பின்னர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், அவர் களை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டேங்கர் லாரியில் ஆயில் கழிவை சுத்தம் செய்த போது மூச்சுத்திணறி 2 தொழிலாளர்கள் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்