தாராபுரம் அருகே சம்பவம்; மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் தந்தையுடன் சென்ற பெண் டாக்டர் பலி

தாராபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் தந்தையுடன் சென்ற பெண் டாக்டர் பலியானார். வேகமாக வந்த வாகனம் ஏறி இறங்கியதில் இந்த பரிதாப சம்பவம் நடந்து விட்டது.

Update: 2019-07-12 23:00 GMT

தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சின்னப்புத்தூர், சின்னப்பள்ளம் வயலைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. விவசாயி. இவருக்கு 2 மகள்கள். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. இளையமகள் லாவண்யா (வயது 23). இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பல் டாக்டராக வேலை செய்து வந்தார். இவர் தினமும் பஸ்சில் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.

பழனிச்சாமி, தினமும் காலையில் தனது மகள் லாவண்யாவை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று தாராபுரம்– பொள்ளாச்சி சாலையில் உள்ள சத்திரம் பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிடுவார். அதன்பிறகு லாவண்யா அங்கிருந்து பஸ்சில் ஏறி பொள்ளாச்சி ஆஸ்பத்திரிக்கு செல்வார். அங்கு வேலை முடிந்ததும் இரவு மீண்டும் பஸ்சில் ஏறி சத்திரம் வந்து இறங்குவார். அப்போது அவருடைய தந்தை மோட்டார் சைக்கிளில் சத்திரம் பஸ் நிறுத்தத்திற்கு சென்று காத்திருந்து, மகளை வீட்டிற்குச் அழைத்துச் செல்வார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, 8.45 மணிக்கு லாவண்யா வழக்கம் போல் பொள்ளாச்சியில் இருந்து பஸ்சில் சத்திரம் வந்து இறங்கியுள்ளார். அவரை பழனிச்சாமி தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு, வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். தாராபுரம்– பொள்ளாச்சி சாலையில், சின்னப்பள்ளம் பிரிவு அருகே இவர்களுடைய மோட்டார்சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது அவர்களுக்குப்பின்னால் ரெட்டிபாளையத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (24) மற்றும் கோவிந்தாபுரத்தை சேர்ந்த சரவணன்(21) ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து கொண்டிருந்தனர்.

கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள், பழனிச்சாமி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியுள்ளனர். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்திருந்த லாவண்யா, தூக்கிவீசப்பட்டு, நடுரோட்டில் விழுந்துவிட்டார்.

அதே போல் பழனிச்சாமி மற்றும் ராஜ்குமார், சரவணன் ஆகியோர் சாலையின் ஓரமாக விழுந்து பலத்த காயம் அடைந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வாகனம் ஒன்று, சாலையின் நடுவில் காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த லாவண்யா மீது ஏறிஇறங்கி, நிற்காமல் சென்றுவிட்டது. இதில் லாவண்யா சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் அருகே இருந்தவர்களும், தாராபுரம் போலீசாரும் விரைந்து சென்று காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராஜ்குமாரும், சரவணனும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். லாவண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் நிற்காமல் சென்ற வாகனத்தையும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து போலீசார் அந்த வாகனத்தை தேடி வருகிறார்கள். வாகனம் மோதி பெண் டாக்டர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்