வியாபாரி வீட்டு முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்

சேலத்தில் வியாபாரி வீட்டு முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். மேலும், அவர்கள் கோவில் உண்டியலையும் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-07-12 22:00 GMT
சேலம், 

சேலம் கிச்சிப்பாளையம் கல்லாங்குத்து சுப்பிரமணிய நகர் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 33). இவர், ஆனந்தா இறக்கம் அருகே பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். தினமும் மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்று வருவது வழக்கம். நேற்று முன்தினம் வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் தூங்க சென்றுவிட்டார். நள்ளிரவு வீட்டு முன்பு நிறுத்தி இருந்த மாரியப்பனின் மோட்டார் சைக்கிள் மற்றும் மற்றொரு மொபட் ஆகியவை தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் பார்த்து உடனடியாக அவருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர் வெளியே வந்து பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைத்தார். ஆனால் இரு சக்கர வாகனங்கள் தீயில் எரிந்து நாசமானது. இது தொடர்பாக டவுன் போலீசில் மாரியப்பன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதில், மாரியப்பன் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்துள்ளது.

மேலும், மர்ம கும்பலை சேர்ந்தவர்கள், அங்கிருந்து அருகில் உள்ள கோவிலுக்கு சென்று உண்டியலையும் உடைத்து அதில் இருந்த காணிக்கையை திருடி சென்றுள்ளனர். இதனால் அந்த மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அதேசமயம், கல்லாங்குத்து பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம கும்பலை சேர்ந்தவர்களின் உருவம் பதிவாகியுள்ளதா? என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

கிச்சிப்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்ததோடு, அங்குள்ள ஒரு கோவில் உண்டியலையும் உடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்