மாநில அரசுடன் கலந்து பேசாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது; நாராயணசாமி குற்றச்சாட்டு

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுவையில் செயல்படுத்த மாநில அரசுடன் கலந்து பேசாமல் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளார்.

Update: 2019-07-12 23:30 GMT
புதுச்சேரி,

புதுவை-காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு சுற்றுச்சூழல் துறை வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவையில் காங்கிரஸ்-தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வருகிற 16-ந் தேதி மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார பயணம் நேற்று நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்ச்சி சோனாம்பாளையத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பிரசார பயணத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு செய்து புதுவை மாநில அரசுடன் கலந்து பேசாமல் புதுவை, காரைக்காலில் 112 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக அகழ்வாராய்ச்சி நடத்த வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக புதுவை அரசுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கடிதம் அனுப்பியுள்ளது. இதனை தொடர்ந்து நான் பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய பெட்ரோலிய துறை மந்திரிக்கும் புதுவை மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கடிதம் அனுப்பி உள்ளேன்.

ஆனால் மத்திய அரசிடம் இருந்து இதுவரை எனக்கு எந்த விதமான பதிலும் வரவில்லை. புதுவையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கடல் பகுதியின் செயல்படுத்தும்போது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். நிலப்பகுதியில் செயல்படுத்தும் போது விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே இந்த திட்டத்தை கைவிடக்கோரி மாநில மக்களின் எதிர்ப்பை காட்டும் வகையில் வருகிற 16-ந் தேதி காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.

இந்த திட்டம் தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் பிரச்சினை எழுப்பினர். அப்போது புதுவை மாநிலத்தில் மக்கள் நலனை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்திற்கும் மாநில அரசு அனுமதி வழங்காது என்று நான் உறுதி அளித்தேன். ஆனால் தற்போது அந்த திட்டத்தை மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த திட்டத்திற்கு எதிராக எந்த விதமான போராட்டம் நடத்தவும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தயாராக உள்ளோம். எனவே மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும். நான் டெல்லி சென்றபோது மத்திய பெட்ரோலிய துறை மந்திரியை சந்திக்க நேரம் கேட்டிருந்தேன். ஆனால் நேரம் ஒதுக்கி தரவில்லை. எனவே அவரை சந்திக்க முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்