அமைச்சரவைக்குத்தான் அதிகாரம்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் ஜனநாயகம் வென்றது - நாராயணசாமி பேட்டி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்குத்தான் அதிகாரம் உள்ளது என சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு மூலம் ஜனநாயகம் வென்றுள்ளது என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2019-07-13 00:15 GMT

புதுச்சேரி,

புதுச்சேரியில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு குறித்து முதல்–அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

முதல்–அமைச்சரின் பாராளுமன்ற செயலாளரான லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதாவது புதுவை அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கவர்னர் தலையிடுகிறார். அவர் அமைச்சரவையின் முடிவுப்படிதான் செயல்பட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கினை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது. அமைச்சரவையின் ஆலோசனைப்படிதான் கவர்னர் செய்பட வேண்டும். அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கவர்னர் தலையிட அதிகாரம் கிடையாது என்று தீர்ப்பளித்தது.

மேலும் அமைச்சரவையின் செயல்பாடுகளுக்கு கவர்னர் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும், வளர்ச்சி திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடக்கூடாது. கொள்கை முடிவு தொடர்பான விவகாரங்களில் ஏதேனும் பிரச்சினை என்றால் ஜனாதிபதிக்கு அதுதொடர்பான கோப்பினை அனுப்பலாம் என்று கூறி மாநில அரசின் அதிகாரத்தை ஐகோர்ட்டு உறுதி செய்தது.

இதை எதிர்த்து உள்துறை அமைச்சகமும், கவர்னர் கிரண்பெடியும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்ல கவர்னருக்கு அதிகாரம் கிடையாது. ஐகோர்ட்டின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடையும் விதிக்கவில்லை. இதற்கிடையே புதுவை அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுக்கு இடைக்கால தடை விதித்தது. அதாவது இலவச அரிசி வழங்குவது, கூட்டுறவு சர்க்கரை ஆலையை ஏலத்துக்குவிட்டு அதன்மூலம் கிடைக்கும் பணத்தை விவசாயிகள், தொழிலாளர்களுக்கு வழங்குவது, ஆதிதிராவிடர் நலத்துறையை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையாக மாற்றுவது போன்றவற்றுக்கு தடை விதித்தது.

மஞ்சள் ரேசன்கார்டுகளுக்கு இலவச அரிசி வழங்குவதை ஏற்க முடியாது என்று கவர்னர் தரப்பில் ஆஜரான வக்கீல் வலியுறுத்தினார். இந்த 3 முடிவுகளும் நிதி, நிலம் சம்பந்தமானது. இதற்கு தடைவிதித்த சுப்ரீம் கோர்ட்டு சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு தடை விதிக்கவில்லை.

இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் லட்சுமிநாராயணன் தரப்பு வக்கீல், இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய அதிகாரமில்லை. ஐகோர்ட்டில்தான் மேல்முறையீடு செய்யவேண்டும். இலவச அரிசி வழங்குவது என்பது மக்கள் பிரச்சினை. இந்த வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டுக்கு செல்லாமல் சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்தது தவறு என்று வாதிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்துள்ளனர். எனவே இப்போது ஐகோர்ட்டு தீர்ப்புதான் அமலில் உள்ளது. அதை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்துள்ளது. இது மக்களுக்கு கிடைத்த வெற்றி. கோர்ட்டு தீர்ப்பின்படி அமைச்சரவைக்குத்தான் அதிகாரம் உள்ளது. ஜனநாயகம் வென்றுள்ளது. புதுச்சேரி மக்கள் வெற்றிபெற்றுள்ளனர்.

பிரதமர் மாநிலங்களில் ஒருங்கிணைந்த வளர்ச்சி வேண்டும் என்கிறார். எல்லா மாநில அரசுகளுக்கும் மக்கள் நல திட்டங்களை நிறைவேற்ற அதிகாரம் உள்ளது. திட்டங்களுக்கு முட்டுக்கட்டைபோட கவர்னருக்கு அதிகாரம் இல்லை. அவர் மாநில வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கிறார். எனவே மத்திய அரசு கவர்னரை திரும்பப்பெற வேண்டும்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு குடிநீர் பிரச்சினையில் தேவையற்ற கருத்துகளை தெரிவித்து தமிழக அரசியல்வாதிகளையும், மக்களின் மனதையும் புண்படுத்தினார். பாராளுமன்றத்தில் இந்த பிரச்சினை எழுந்ததை தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி மன்னிப்பு கோரியதாக ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். கவர்னர் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையைத்தான் செய்யவேண்டும். வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தக்கூடாது என்று ஐகோர்ட்டு கூறியுள்ளது.

மாநில திட்டக்குழு கூட்டத்திற்கு சட்டமன்ற கட்சி தலைவர்களை அழைக்கவேண்டும் என்று நான் கோப்பு அனுப்பினேன். ஆனால் அந்த கோப்பினை கவர்னர் அப்படியே வைத்துக்கொண்டார். தற்போது வழக்கிற்காக டெல்லியில் ஒரு வார காலமாக முகாமிட்டு உள்ளார். புதுவை மக்களுக்கு விரோதமாக செயல்படும் இந்த கவர்னர் தேவையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதையே தேர்தல் முடிவுகளும் எதிரொலித்து உள்ளது.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

முதல்–அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. கூறும்போது, அரசு அதிகாரிகள் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக செயல்பட்டால் அவர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படும். தொடர்ந்து அவர்களது செயல்பாடுகளை பார்ப்போம் என்று குறிப்பிட்டார்.

பேட்டியின்போது அரசு கொறடா அனந்தராமன், ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர்.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பினை தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகள் முதல்–அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து இனிப்பு வழங்கினார்கள். சட்டசபை முன்பு பட்டாசு வெடித்தும் மகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்