மனைவியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - கோவை கோர்ட்டு தீர்ப்பு

மனைவியை எரித்துக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2019-07-12 22:00 GMT
கோவை, 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பழனிகவுண்டன்புதூர் குள்ளக்காபாளையம் ராஜவீதியை சேர்ந்தவர் குமார்(வயது 34). கட்டிட தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள இவர் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து தனது மனைவி உமாமகேஸ்வரியுடன் (26) தகராறு செய்து வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் குமாரின் மகன் மருதுபாண்டி சபரிமலை கோவிலுக்கு சென்றார். அப்போது, கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் 11-ந் தேதி இரவு 10.30 மணிக்கு குமார் கோழிக்கறியும், முட்டை சோறும் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு சென்றார். இதை உமாமகேஸ்வரி கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த குமார், உமாமகேஸ்வரி மீது மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியிலும், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் உமா மகேஸ்வரி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் குமார் மீது இந்திய தண்டனை சட்டம் 302 (கொலை)பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு கோவை முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்புக் கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட கட்டிட தொழிலாளி குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி குணசேகரன் தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்