20 கி.மீ. தூரத்தில் உடல் சிக்கியது ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் பலி மனைவியை தேடும் பணி தீவிரம்

ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் உடல் 20 கி.மீ. தொலைவில் உள்ள காமோதே கழிமுகப்பகுதியில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது மனைவியை தேடும் பணி நடந்து வருகிறது.

Update: 2019-07-12 23:00 GMT
மும்பை, 

ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் உடல் 20 கி.மீ. தொலைவில் உள்ள காமோதே கழிமுகப்பகுதியில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது மனைவியை தேடும் பணி நடந்து வருகிறது.

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்

நவிமும்பை உம்ரோலி பகுதியை சேர்ந்தவர் ஆதித்யா (வயது30). இவர் சி.பி.டி. பேலாப்பூரில் உள்ள எலக்ட்ரானிக் ஷோரூமில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சரிகா (28). கணவர், மனைவி இருவரும் கடந்த 9-ந் தேதி மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்று கொண்டிருந்தனர். அங்குள்ள காடி ஆற்றுப்பாலத்தை கடந்து செல்ல முயன்ற போது தம்பதியை மோட்டார்சைக்கிளுடன் வெள்ளம் அடித்து சென்றது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த கிராமவாசிகள் உடனே பன்வெல் தாலுகா போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். எனினும் தம்பதியை மீட்க முடியவில்லை.

உடல் மீட்பு

இந்தநிலையில் ஜூய் காமோதே பகுதியில் உள்ள கழிமுகப்பகுதியில் உடல் ஒன்று மிதப்பதாக பன்வெல் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது பிணமாக மீட்கப்பட்டவர் பன்வெலில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஆதித்யா என்பது தெரியவந்தது. வெள்ளம் அடித்து செல்லப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறினர்.

சரிகாவை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், சிட்கோ தீயணைப்பு துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்