கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.42,437 கோடி பயிர்க்கடன் அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்

கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.42 ஆயிரத்து 437 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

Update: 2019-07-13 22:00 GMT
திருச்செந்தூர், 

கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.42 ஆயிரத்து 437 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

நூற்றாண்டு விழா

திருச்செந்தூர் கூட்டுறவு நகர வங்கியின் நூற்றாண்டு விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். கூட்டுறவு நகர வங்கி தலைவர் கோட்டை மணிகண்டன் வரவேற்று பேசினார்.

கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கூட்டுறவு நகர வங்கியின் நூற்றாண்டு மலரை வெளியிட்டார். பின்னர் அவர், 623 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 70 லட்சம் மதிப்பிலான பல்வேறு கடன் உதவிகளை வழங்கினார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, வங்கியின் பொதுநல நிதியில் இருந்து பயனாளிகளுக்கு ரூ.57 ஆயிரத்து 800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

ரூ.42 ஆயிரத்து 437 கோடி

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 17 ஆயிரத்து 550 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தலை சிறப்பாக நடத்தினார். இதன்மூலம் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இன்னும் சில கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அதன்மூலம் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு வட்டியில்லாமல் பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. தி.மு.க. ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கு ரூ.9 ஆயிரத்து 163 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டது. ஆனால், அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 82 லட்சத்து 47 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.42 ஆயிரத்து 437 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 1 லட்சத்து ஆயிரத்து 370 விவசாயிகளுக்கு ரூ.789 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது. அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 55 ஆயிரத்து 415 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.221 கோடியே 53 லட்சம் கடன் வழங்கப்பட்டு உள்ளது. 14 லட்சத்து 39 ஆயிரத்து 891 சிறு வியாபாரிகளுக்கு ரூ.1,643 கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது.

மகளிர் சுயஉதவிக்குழு

மகளிர் சுய உதவிக்குழுவினருக்கும் கடன் உதவி வழங்கப்படுகிறது. இதனால் கந்து வட்டிக்காரர்களிடம் சிக்கி தவித்த பொதுமக்களை அரசு மீட்டுள்ளது. திருச்செந்தூர் கூட்டுறவு நகர வங்கியில் 2 ஆயிரத்து 91 பேருக்கு ரூ.3 கோடியே 15 லட்சம் கடன் வழங்கப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கூட்டுறவு வங்கிகளில் ரூ.4 ஆயிரத்து 18 கோடி நகைக்கடன் வழங்கப்பட்டு உள்ளது. திருச்செந்தூர் கூட்டுறவு நகர வங்கியில் ரூ.398 கோடியே 77 லட்சம் நகைக்கடன் வழங்கப்பட்டு உள்ளது. கூட்டுறவு வங்கிகளில் மொத்தம் 6 கோடியே 82 லட்சத்து 44 ஆயிரம் பேருக்கு ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்து 665 கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது. திருச்செந்தூர் கூட்டுறவு நகர வங்கியில் 67 ஆயிரத்து 790 பேருக்கு ரூ.607 கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது.

கிசான் அட்டை

மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரத்தை 3 தவணைகளாக பிரித்து வழங்குகின்றனர். இதில் இந்தியாவிலேயே அதிகம் பயன்பெற்ற மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இங்கு 44 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.844 கோடி வழங்க ஏற்பாடு செய்தவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அனைத்து விவசாயிகளுக்கும் கிசான் அட்டை வழங்க மாவட்ட கலெக்டர் ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு தேவையான விவசாயிகளின் கணக்கெடுப்பு தகவல்களை மாவட்ட நிர்வாகத்துக்கு வழங்க தயாராக உள்ளோம்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தவறான பிரசாரங்களை முன்வைத்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றது. ஆனால் அ.தி.மு.க. அரசு என்றும் மக்களுக்கு நன்மை தரும் திட்டங்களையே தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. எனவே, அரசுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ

அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:-

திருச்செந்தூருக்கும், கூட்டுறவுத்துறைக்கும் சம்பந்தம் உண்டு. ஏனெனில் நமது மண்ணின் மைந்தர் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்து பல சாதனைகளை புரிந்தார். கூட்டுறவுத்துறையில் கடந்த 9 ஆண்டுகளாக அமைச்சர் செல்லூர் ராஜூ பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் வேலூருக்கு அடுத்தபடியாக திருச்செந்தூரில் உள்ள கூட்டுறவு வங்கி நூற்றாண்டு விழாவை கொண்டாடி பெருமை சேர்த்துள்ளது. தூத்துக்குடி பசுமை பண்ணை காய்கறி அங்காடியும் தமிழகத்திலேயே விற்பனையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, தாசில்தார் தில்லைப்பாண்டி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கோவிந்தராஜ், மண்டல இணை பதிவாளர் அருளரசு, அ.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டுறவு துணை பதிவாளர் சந்திரா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்