மக்கள் நீதிமன்றம் மூலம் 1,819 வழக்குகளுக்கு தீர்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 இடங்களில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 1,819 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2019-07-13 21:45 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 இடங்களில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 1,819 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

மக்கள் நீதிமன்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் நடந்தது. தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம், சாத்தான்குளம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 6 இடங்களில் மக்கள் நீதிமன்றம் நடந்தது.

இதில் மொத்தம் 12 அமர்வுகள் அமைக்கப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

தூத்துக்குடியில் நடந்த மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விசுவநாத் தொடங்கி வைத்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான சாமுவேல் பெஞ்சமின் வரவேற்றார். மாவட்ட கூடுதல் முதன்மை நீதிபதி சிவஞானம், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹேமா, மக்கள் நீதிமன்ற நீதிபதி முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1,819 வழக்குகளுக்கு தீர்வு

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 3 ஆயிரத்து 7 வழக்குகள் இந்த மக்கள் நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அதில் 1,636 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் ரூ.4 கோடியே 32 லட்சத்து 90 ஆயிரத்து 746 பைசல் செய்யப்பட்டது.

இதேபோல் வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முந்தைய காலக்கட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 110 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் 183 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் ரூ.1 கோடியே 60 லட்சம் பைசல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,819 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, அதன்மூலம் ரூ.5 கோடியே 92 லட்சத்து 90 ஆயிரத்து 746 பைசல் செய்யப்பட்டது.

கோவில்பட்டி

கோவில்பட்டி சப்-கோர்ட்டில் நீதிபதி அகிலாதேவி தலைமையிலும், மாவட்ட முன்சீப் கோர்ட்டில் நீதிபதி முரளிதரன் தலைமையிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.

அரசு வக்கீல் சந்திரசேகர், வக்கீல்கள் செல்வின் ராஜ்குமார், விஜயபாஸ்கர், பாப்புராஜ், சங்கர் கணேஷ், ரவிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வாகன விபத்து, காசோலை மோசடி உள்ளிட்ட மொத்தம் 1,427 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 462 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

மேலும் செய்திகள்