பா.ஜனதாவை கண்டித்து நெல்லையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

பாரதீய ஜனதா கட்சியை கண்டித்து நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2019-07-13 22:00 GMT
நெல்லை, 

பாரதீய ஜனதா கட்சியை கண்டித்து நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

கர்நாடக மாநிலத்தில் குதிரை பேரம் நடத்தி காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்வதாக கூறியும், இதனை கண்டித்தும் நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு நேற்று காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார்.

கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.எம்.சிவகுமார், மேற்கு மாவட்ட தலைவர் பழனிநாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

ஜனநாயகத்துக்கு விரோதமானது

முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கூறுகையில், “கர்நாடக மாநிலத்தில் பா.ஜனதா தனது அதிகாரத்தை பயன்படுத்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பல கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்க முயற்சி செய்கிறது. இது ஜனநாயகத்துக்கு விரோதமானது. குதிரை பேரம் நடத்தும் பா.ஜனதாவை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். கர்நாடக மாநில முதல்-மந்திரி குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்போவதாக கூறி இருக்கிறார். இதில் காங்கிரஸ் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்“ என்றார்.

தொடர்ந்து பா.ஜனதாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் வசந்தகுமார் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்