தீவு உள்ளிட்ட 15 இடங்கள் குமரி கடலில் மூழ்கி உள்ளன நாகர்கோவிலில் நடந்த கருத்தரங்கில் தகவல்

தீவு உள்ளிட்ட 15 இடங் கள் குமரி கடலில் மூழ்கி உள்ளதாக நாகர்கோவிலில் நடந்த கருத்தரங்கில் தெரியவந்துள்ளது.

Update: 2019-07-13 22:45 GMT
நாகர்கோவில்,

பன்முக பார்வையில் குமரி கண்டம் பற்றிய கருத்தரங்கம் நாகர்கோவில் கோட்டாரில் உள்ள ராஜகோகிலா தமிழ் அரங்கத்தில் நடந்தது. ராஜகோகிலா அறக்கட்டளை தென்குமரி தமிழ் சங்க தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார். ராஜம் சந்திரஹாசன் குத்துவிளக்கேற்றினார். அறக்கட்டளை துணை தலைவர் அனுசுயாசெல்வி வரவேற்று பேசினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷையன் கலந்து கொண்டு, குமரி கண்டம் முற்காலத்தில் இருந்ததாகவும், அதில் பெரும்பாலான நிலப்பரப்பு கடலில் மூழ்கியதாகவும் கூறி அதற் கான சில ஆதாரங்களை எடுத்து கூறினார். மேலும் அதனை உறுதி செய்ய பலரும் குமரி கண்டம் பற்றி ஆய்வு மேற்கொள்ள வர வேண்டும் என்று எடுத்துரைத்தார்.

கடல் கொண்ட பகுதிகளில் குமரி கண்டம் குறித்த ஆய்வு மேற்கொண்ட ஒருங்கிணைந்த பெருங்கடல் சார் பண்பாட்டு நடுவம் தலைவர் ஒரிசா பாலு கலந்து கொண்டு, தான் மேற்கொண்ட ஆய்வை பற்றியும், ஒரு தீவு உள்ளிட்ட 15 இடங்கள் குமரி கடல் பகுதிகளில் மூழ்கி உள்ளதை பற்றியும் விளக்கம் அளித்தார்.

மேலும் ஆவணங்களில் குமரி கண்டம் பற்றிய தகவலை தஞ்சை தமிழ் பல்கலைக்கழக சுவடியியல் அரிய கையெழுத்துத்துறை இணை பேராசிரியர் ஆதித்தன், நாட்டுப்புற கதைப்பாடல்களில் குமரி கண்டம் பற்றி சென்னை உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன துணை தலைவர் தசரதன், இக்கால இலக்கியங்களில் குமரி கண்டம் பற்றி சென்னை மத்திய செம்மொழி தமிழ் ஆராய்ச்சி நிறுவன முகிலை ராசபாண்டியன், தமிழ் இதழ்களில் குமரி கண்டம் பற்றி பேராசிரியை லக்குமி, குமரி கண்டமும், கன்னியாகுமரி மாவட்டமும் குறித்து மாவட்ட வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையம் பத்மநாபன், சங்க இலக்கியங்களில் குமரி கண்டம் குறித்து பேராசிரியை கலைமகள் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியை சண்முகையா தொகுத்து வழங்கினார். முடிவில் எழுத்தாளர் தணிகைகுமார் நன்றி கூறினார்.

கருத்தரங்கில் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி செயலாளர் ராஜன், பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி தலைவர் காமராஜ், தென்குமரி கல்விக்கழகம் செயலாளர் வெற்றிவேல், கல்லூரி முன்னாள் முதல்வர் நடேசன் மற்றும் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த நிர்வாகிகள், மாணவ, மாணவிகள் திரளானவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ராஜகோகிலா அறக்கட்டளை தென்குமரி தமிழ் சங்கம் செய்திருந்தது.

மேலும் செய்திகள்