தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேட்டி

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என சேலத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் கூறினார்.

Update: 2019-07-13 23:00 GMT
சேலம், 

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட 5-வது மாநாடு சேலம் சிவில் என்ஜினீயர்ஸ் சங்க கட்டிடத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் கோவிந்தராஜூ வரவேற்றார். மாநில தலைவர் சுப்பிரமணியன், துணைத்தலைவர் திருவேரங்கன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

மாநாட்டில் தமிழகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். 2016-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சி தேர்தல்கள் 3 ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ளது. இதனால் ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் அதிகாரிகள், அலுவலர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதால் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.

உதவி இயக்குனர் காலிப்பணியிடங்களை தகுதியான நபர்களை கொண்டு பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும். ஊரக வளர்ச்சி துறை ஊழியர்களுக்கு அனைத்து விதமான மருத்துவ பரிசோதனை முகாம்களை ஏற்பாடு செய்து தர வேண்டும். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை ஊராட்சிகளை அடிப்படை தேவைக்காகவும், நிர்வாக வசதிக்காகவும் இரண்டாக பிரிக்க வேண்டும்.

30-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை கொண்ட தலைவாசல், அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், ஓமலூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து, புதிய ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்க வேண்டும். ஊரக வளர்ச்சித்துறையில் அனைத்து நிலைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பட உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதன் பின்னர் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவரும், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளருமான சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடக்காததால் தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்திருந்தால் அவர்கள் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுத்திருப்பார்கள். எனவே, தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின்போது, பல்வேறு நிர்வாகிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கைவிட கோரிக்கை வைத்தோம். ஆனால் அரசு அதை கண்டு கொள்ளவில்லை. வழக்கு உள்ளதால், பணி ஓய்வு பெற்றவர்களுக்கு உரிய பணப்பலன்கள் கிடைக்கவில்லை. எனவே, அதை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரக வளர்ச்சித்துறையில் 5 ஆயிரம் பணியிடங்கள் உள்பட அனைத்து துறைகளிலும் மொத்தம் 3 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு சுப்பிரமணியன் கூறினார்.

மேலும் செய்திகள்