கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4,475 வழக்குகளுக்கு தீர்வு

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4,475 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2019-07-13 22:15 GMT
கடலூர்,

கடலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்றுமுறை தீர்வு மையத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. முன்னதாக இதனை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கோவிந்த ராஜன் திலகவதி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-

கடலூர் மாவட்ட நீதித்துறை மூலம் மக்கள் நீதிமன்றத்தில் அதிக வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. இதனால் நிலுவையில் உள்ள வழக்குகள் குறைந்து வருகின்றன. இதன் மூலம் பொதுமக்களுக்கும் நீதிமன்றம் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நீதித்துறை, மாவட்ட நிர்வாகம், காவல்துறை ஆகியவை இணைந்து பொதுமக்களுக்கு சிறப்பான சேவை அளித்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் முன்னிலை வகித்து பேசியதாவது:-

பழைய காலத்தில் வழக்குகளுக்கு கிராமத்தில் தீர்வு காணப்படும் நடைமுறையில் தான் மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. இதன் மூலம் இரண்டு தரப்பினரும் மன உளைச்சலிலிருந்து விடுபட்டு சமரசம் அடைவது மக்கள் நீதிமன்றத்தின் நோக்கமாகும். மன்னிப்பு கேட்பவன் மனிதன், மன்னிப்பவன் மாமனிதன் என்பதற்கு ஏற்ப நாம் நடந்து கொள்ள வேண்டும். போட்டி மனப்பான்மை இருக்கக்கூடாது. நமது அரசு நல்ல வாய்ப்பை வழங்கியுள்ளது. பொதுமக்கள் அரசுக்கும், நீதித்துறைக்கும் ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்

இவ்வாறு கலெக்டர் அன்புசெல்வன் பேசினார்.

இதன்பிறகு மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்பட்ட வழக்குகளுக்கான இழப்பீடு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்., முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி செந்தில்குமார், மாவட்ட நீதிபதி (நிரந்தர மக்கள் நீதிமன்றம்) அய்யப்பன் பிள்ளை, தலைமை குற்றவியல் நீதிபதி திருவேங்கட சீனுவாசன், முதன்மை மற்றும் முதலாவது சார்பு நீதிபதி எம்.மூர்த்தி, இரண்டாவது கூடுதல் சார்பு நீதிபதி பிரபாவதி, கூடுதல் மாவட்ட நீதிபதி (நில எடுப்பு) கோபிநாத், சார்பு நீதிபதி .ஜோதி மற்றும் வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டபணிகள் குழு சார்பில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்திற்கு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி இளவரசன் தலைமை தாங்கினார். சார்பு நீதிபதி ஜெயசூர்யா, கூடுதல் சார்பு நீதிபதி மகாலட்சுமி, உரிமையியல் நீதிபதி மனோகர், ஓய்வுபெற்ற நீதிபதி ராஜகோபால் ஆகியோர் வழக்குகளை விசாரித்து சமரச தீர்வு ஏற்படுத்தினர். இதில் அரசு வக்கீல் விஜயகுமார், வழக்கறிஞர் சங்க தலைவர்கள் ஜெயக்குமார், மகேந்திரவர்மன், சிவாஜி சிங், வட்ட சட்ட பணிகள் குழு உறுப்பினர் விசுவநாதன் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர். முடிவில் இளநிலை நிர்வாக உதவியாளர் ஆனந்த ஜோதி நன்றி கூறினார்.

இந்த முகாமில் குற்றவியல் வழக்குகள், விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 413 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதற்கு கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி கே.கருணாநிதி தலைமை தாங்கினார். வட்ட சட்ட பணிகள் குழுத்தலைவரும் சார்பு நீதிபதியுமான வி.எம்.நீஷ் முன்னிலை வகித்தார். முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கீதா, ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.முருகபூபதி. வக்கீல்கள் சங்க தலைவர்கள் ஜே.சிலம்புச்செல்வன், பி.கோபாலகிருஷ்ணன், சமூக சேவகர் எம்.தேவதாஸ் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர். இதில் 378 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வட்ட சட்டப்பணிகள் அலுவலக முதுநிலை நிர்வாக உதவியாளர் அஸ்வத்ராமன் செய்திருந்தார்.

திட்டக்குடி வட்ட சட்ட பணிக்குழு சார்பில் திட்டக்குடி நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. சார்பு நீதிபதி உமாராணி குற்றவியல் நீதித்துறை நடுவர் தாமரைஇளங்கோ, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி வெங்கடேசன் ஆகியோர் வழக்குகளை விசாரித்த னர். இதில் வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதில் 149 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் 6,807 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அவற்றில் 4,475 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் இழப்பீடாக ரூ.24 கோடியே 87 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டது.

மேலும் செய்திகள்