நீலகிரியில் 12 புதிய அரசு பஸ்கள் இயக்கம்

நீலகிரியில் 12 புதிய அரசு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டன.

Update: 2019-07-13 22:06 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கு ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். நீலகிரி மண்டலத்தில் ஊட்டி-1, ஊட்டி-2, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், மேட்டுப்பாளையம்-2 ஆகிய 6 போக்குவரத்து பணிமனைகள் உள்ளன. ஊட்டியில் இருந்து கோவை, திருப்பூர், சேலம், பெங்களூரு, மைசூரு, கோழிக்கோடு உள்ளிட்ட வெளியிடங்களுக்கும், மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மலைப்பாதைகளில் உள்ள வளைவில் பஸ்கள் திரும்பும் வகையில் சிறிய பஸ்களும் இயக்கப்படுகிறது. நீலகிரி போக்குவரத்துக்கழக மண்டலத்துக்கு புதியதாக 12 அரசு பஸ்கள் வந்து உள்ளன. இந்த புதிய பஸ்கள் போக்குவரத்துக்கழகத்தில் பதிவு செய்யப்பட்டு, நேற்று முதல் அந்தந்த பணிமனைகளில் இருந்து இயக்கப்பட்டது.

பஸ்சின் முன் மற்றும் பின்பகுதியில் புறப்படும் இடம், சேரும் இடம், செல்லும் முக்கிய இடங்கள் குறித்து எல்.இ.டி. திரையில் ஓடிக்கொண்டே இருக்கும். இரண்டு பகுதியில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு உள்ளன. மேலும் அவசர காலங்களில் பயணிகள் வெளியேற ஏதுவாக அவசர கால கதவுகள் உள்ளது. பயணிகள் தங்களது உடைமைகளை வைக்க இடவசதி செய்யப்பட்டு இருக்கிறது.

ஊட்டி-சேலம், கூடலூர்-ஈரோடு, ஊட்டி-பழனி, கோத்தகிரி-துறையூர், கூடலூர்-உடுமலை, மேட்டுப்பாளையம்-மதுரை, மேட்டுப்பாளையம்-திருச்சி, ஊட்டி-சிங்காரா, ஊட்டி-சிறியூர் ஆகிய இடங்களுக்கு புதிய பஸ்கள் இயக்கப்பட்டு உள்ளது. இதில் சிங்காரா, சிறியூர் பகுதிகளுக்கு சிறிய அளவிலான பஸ்கள் இயக்கப்படுகிறது.

இந்த தகவலை போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்