ஆனித்திருவிழாவில் கோலாகலமாக நடந்தது: நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2019-07-14 22:30 GMT
நெல்லை, 

நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

ஆனித்திருவிழா

தென்தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலும் ஒன்று. இந்த கோவில் திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற திருத்தலமாகும். நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனித்தேரோட்டம் திருவிழா 10 நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகளும், சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன. விழா நாட்களில் காலை, இரவில் சுவாமி-அம்பாள் வீதிஉலா நடந்து வந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமிகள் எழுந்தருளி பரிவார மூர்த்திகளுடன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடந்தது.

தேரோட்டம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. தேரோட்டத்தையொட்டி நெல்லை மாநகரம் விழாக்கோலம் பூண்டு இருந்தது. நெல்லை டவுன் நான்கு ரதவீதிகளும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு இருந்தது. 9-ம் நாள் நிகழ்ச்சியான நேற்று அதிகாலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மேள தாளம் முழங்க சுவாமிகள் தேரில் எழுந்தருளினர். சுவாமி தங்க ஜரிகையுடன் வெண்பட்டும், அம்பாள் சிவப்பு நிற கரையுடன் மஞ்சள் பட்டும் அணிந்து இருந்தனர்.

தேரோட்டத்தை காண அதிகாலையில் இருந்தே சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் வரத்தொடங்கினர். நெல்லை டவுன் நான்கு ரதவீதிகளிலும் பக்தர்கள் குவிந்து இருந்தனர். காலை 8.45 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வடம் பிடித்து சுவாமி தேரை இழுத்து தொடங்கி வைத்தார். அப்போது ‘ஓம் நமச்சிவாய, தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி‘ என்று பக்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தொடங்கினர்.

அலங்கரிக்கப்பட்ட காந்திமதி யானை தேருக்கு முன்பு சென்றது. பஞ்ச வாத்தியம் முழங்கிக்கொண்டு 60 பேர் தேர் முன்பு ஊர்வலமாக சென்றனர். தேருக்கு பின்னால் இளைஞர்கள் தடி போட்டனர். வாகையடி முனை, சந்தி பிள்ளையார் கோவில் திருப்பம் பகுதியில் தேர் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. சுவாமி தேர் பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து வந்த காட்சி பக்தர்களை பரவசப்படுத்தியது. மதியம் 1.20 மணியளவில் சுவாமி தேர் போத்தீஸ் கார்னர் பகுதியில் வந்தது.

அம்பாள் தேர்

பின்னர் அம்பாள் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தொடங்கினர். இதற்கிடையில் சுவாமி தேரை நிலைக்கு கொண்டு வரும் பணியில் பக்தர்கள் ஈடுபட்டனர். பின்னர் மாலை 5.10 மணிக்கு சுவாமி தேர் நிலைக்கு கொண்டு வரப்பட்டது. அம்பாள் தேர் 6 மணிக்கு நிலைக்கு வந்தது. முன்னதாக விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேர்கள் இழுக்கப்பட்டன. இறுதியில் சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்பட்டது. தேர் ஒரே நாளில் நிலைக்கு கொண்டு வரப்பட்டன.

தேரோட்டத்தை காண நெல்லையை சுற்றியுள்ள பக்தர்கள் மட்டும் அல்லாமல் வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் வந்து இருந்தனர். விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர். நெல்லை டவுன் நான்கு ரத வீதிகளிலும் பக்தர்கள் தலைகளாக காட்சி அளித்தது.

விழாவில் விஜிலா சத்யானந்த் எம்.பி., லட்சுமணன் எம்.எல்.ஏ., நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், நெல்லை உதவி கலெக்டர் மணீஸ் நாரணவரே, நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன், துணை கமிஷனர்கள் சரவணன், மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் பரஞ்ஜோதி, நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி, நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா, அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தேரோட்டத்தை காண வந்த பக்தர்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். பல போலீசார் சாதாரண உடையில் கண்காணித்தனர். ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். நான்கு ரதவீதிகளிலும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது. சில போலீசார் உயரமான கட்டிடத்தில் இருந்து தொலைநோக்கி கருவி மூலம் கூட்டத்தை கண்காணித்தனர்.

நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தையொட்டி அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. தேரோட்டத்தை காண வரும் பக்தர்கள் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை தனித்தனியாக நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்