அருங்காட்சியகத்தில் 31 சிலைகள் திருடியதாக நேபாள எல்லையில் கைதான வாலிபர் சிறையில் அடைப்பு

திருச்சி அருங்காட்சியகத்தில் 31 சிலைகள் திருடப்பட்ட வழக்கில் நேபாள எல்லையில் கைதான வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2019-07-14 23:30 GMT
கும்பகோணம்,

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் ராணி மங்கம்மாள் அரசு அருங்காட்சியகம் உள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு இங்கிருந்த 31 சிலைகள் திருட்டு போனது. இதுகுறித்து மலைக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் காரைக்குடியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது47), ஆனந்தன் (44), சிவா(47), திருப்பத்தூரை சேர்ந்த சிவசிதம்பரம் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 21 சிலைகள் மீட்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.5 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலர் வெளி மாநிலங்களில் தலைமறைவாகி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத் தது. அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பல்வேறு மாநிலங்களில் அவர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் வழக்கில் தேடப்பட்டு வந்த காரைக்குடி பட்டணம் பட்டியை சேர்ந்த ராம்குமார்(35) என்பவர் இந்திய-நேபாள எல்லையில் உள்ள சோனாலி என்ற இடத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.

பின்னர் அவர் விமானம் மூலம் திருச்சிக்கு அழைத்து வரப்பட்டார். அவரை நேற்று கும்பகோணம் அழைத்து வந்த போலீசார் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மாதவராமனுஜம் வீட்டுக்கு அழைத்து சென்று ஆஜர்படுத்தினர். ராம்குமாரை வருகிற 26-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்