குண்டும், குழியுமான அழிஞ்சமங்கலம்-ஆழியூர் சாலை சீரமைக்கப்படுமா? மாணவ-மாணவிகள் எதிர்பார்ப்பு

குண்டும், குழியுமான அழிஞ்சமங்கலம்-ஆழியூர் சாலை சீரமைக்கப்படுமா? என மாணவ-மாணவிகள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2019-07-14 22:45 GMT
நாகப்பட்டினம்,

நாகை கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து அழிஞ்சமங்கலம் வழியாக ஆழியூர் செல்லும் சாலை உள்ளது. இந்த மெயின் சாலையில் இருந்து அழிஞ்சமங்கலம் ஆதிதிராவிட நல உயர்நிலைப்பள்ளிக்கு செல்ல இணைப்பு சாலை உள்ளது. இந்த இணைப்பு சாலை கடந்த 3 ஆண்டுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது இந்த சாலை சேதமடைந்து, ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படு கிறது. அருகில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துடனேயே இந்த சாலையை கடந்து சென்று வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கூறியதாவது:- அழிஞ்சமங்கலத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிட நல உயர்நிலைப்பள்ளிக்கு செல்லும் இணைப்பு சாலை போடப்பட்டது. சாலை போடப்பட்டு சில மாதங்களிலேயே சேதமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்த நிலையில் உள்ளது.

பாலையூர், ஆழியூர், செல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து அருகில் உள்ள அரசு பள்ளிக்கு மாணவ-மாணவிகள் வருகின்றனர். இந்த சாலை மோசமாக உள்ளதால், சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் நிலைத்தடுமாறி கீழே விழுந்து அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

நடவடிக்கை

மேலும் இரவு நேரங்களில் குண்டும் குழியுமான இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனால் வாகனமும் விரைவில் சேதமடைகிறது. நடந்த செல்லும் பொதுமக்களும் இந்த சாலையை கடந்து செல்லும்போது கால்களில் கற்கள் குத்தி காயங்கள் ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்த்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்