காதல் திருமணம் செய்த பெண் மர்ம சாவு: கலெக்டர் அலுவலகம் முன்பு உறவினர்கள் சாலை மறியல்

ஏற்காட்டில் காதல் திருமணம் செய்த பெண் மர்மமாக இறந்த நிலையில், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி கலெக்டர் அலுவலகம் முன்பு அந்த பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதேநேரத்தில் தற்கொலைக்கு தூண்டியதாக அந்த பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-07-15 23:00 GMT
சேலம், 

சேலம் மாவட்டம் ஏற்காடு கோவில்மேடு பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார், கூலித்தொழிலாளி. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒண்டிக்கடை பகுதியை சேர்ந்த கரிஷ்மா(வயது 23) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 வயதில் அஸ்வா என்ற மகன் உள்ளான். இந்தநிலையில் கரிஷ்மா நேற்று முன்தினம் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கரிஷ்மாவுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் அவரது இறப்பு குறித்து உதவி கலெக்டர் மாறன் விசாரணை நடத்தி வருகிறார்.

இதற்கிடையில் இறந்த பெண்ணின் உறவினர்கள் ஏராளமானவர்கள் நேற்று காலை சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கரிஷ்மா சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்களிடம் போலீஸ் உதவி கமிஷனர் ஈஸ்வரன், இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம் பெண் மர்ம சாவு குறித்து உதவி கலெக்டர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார் என்று போலீசார் உறுதியளித்தனர். அதைதொடர்ந்து அந்த பெண்ணின் உறவினர்கள் சேலம் உதவி கலெக்டர் மாறனை சந்தித்து பேசினர்.

இதனிடையே கரிஷ்மாவின் மரணத்திற்கு அவரது கணவர் செல்வகுமார் தான் காரணம் என அவரது உறவினர் நவாஸ், ஏற்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்தியதில், கரிஷ்மாவிடம் அடிக்கடி கணவர் தகராறில் ஈடுபட்டு அவரை தற்கொலைக்கு தூண்டியதாக தெரியவந்தது. இதையடுத்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் செல்வகுமார் மீது ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை நேற்று கைது செய்தனர்.

மேலும் செய்திகள்