பெரம்பலூர் மாவட்டத்தில் நுண்ணீர் பாசன திட்டத்திற்கு ரூ.24½ கோடி ஒதுக்கீடு

பெரம்பலூர் மாவட்டத்தில் நுண்ணீர் பாசன திட்டத்திற்கு ரூ.24½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று வேளாண்மை இணை இயக்குனர் சந்தான கிருஷ்ணன் தெரிவித் துள்ளார்.

Update: 2019-07-16 22:15 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தை மானிய விலையில் நிறுவும் பொருட்டு அரசு 2019-20-ம் ஆண்டில் ரூ.24 கோடியே 55 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் திட்டத்தை நிறுவும் பொருட்டு நடப்பு ஆண்டில் சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் கருவிகள் வாங்குவதற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.24 கோடியே 55 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடையலாம். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 152 வருவாய் கிராமங்களிலும் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மானியத்தை பெற்று பயனடையலாம்

விவசாயத்திற்கு தேவையான தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள இந்த சூழலில் நுண்ணீர் பாசன திட்டத்தை விவசாயிகள் பின்பற்ற வேண்டியது அவசியம். நடப்பு நிதியாண்டின் படி இத்திட்டத்தின் மூலம் 3,107 ஹெக்டேர் பரப்பளவிலான நிலம் பயனடைய உள்ளது. ஒரு விவசாயி அதிகபட்சம் 12.5 ஏக்கர் வரையிலான நிலத்தில் நுண்ணீர் பாசன திட்டத்தை நிறுவி மானியத்தை பெற்று பயனடையலாம். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் புகைப்படம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், சிட்டா நகல், அடங்கல், நிலம் வரைபடம், கிணறு ஆவணம், நீர் மற்றும் மண் பரிசோதனை ஆய்வு முடிவுகள், சிறு- குறு விவசாயிக்கான சான்றிதழ் ஆகியவற்றுடன் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்