கணவரை கண்டுபிடித்து தரக்கோரி போலீஸ் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட பெண்

கணவரை கண்டுபிடித்து தரக்கோரி திருப்பூரில் போலீஸ் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-07-16 21:30 GMT
திருப்பூர்,

திருப்பூர் ராக்கியாபாளையத்தை சேர்ந்தவர் அன்னபூரணி(வயது 36) இவர் நேற்று காலை 9 மணி அளவில் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். இதுகுறித்து அவர் கூறும்போது, எனது கணவர் செந்தில்குமார்(42) புதிதாக தொழில் தொடங்க என்னிடம் பணம் கேட்டார்.

இதை நம்பி சுய உதவிக்குழுக்கள், தனியார் நிதி நிறுவனம் ஆகியோரிடம் கடன் வாங்கி எனது கணவருக்கு கொடுத்தேன். ஆனால் எங்கள் பகுதியில் வசித்து வந்த ஒரு பெண்ணுடன் கடந்த வாரம் எனது கணவர் மாயமாகி விட்டார்.

எனது கணவருக்கு வாங்கிக்கொடுத்த கடன் தொகையை என்னிடம் கேட்டு வருகிறார்கள். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். எனது கணவரை கண்டுபிடித்து கொடுக்கும்படி திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும்படி கூறி என்னை இங்கு அனுப்பி வைத்தனர். இன்று(நேற்று) காலையில் இங்கு வந்து புகார் அளித்தபோது,

இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் தான் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க முடியும். அங்கு சென்று புகார் அளியுங்கள் என்று கூறினார்கள். இவ்வாறு அலைக்கழிப்பதால் வேறு வழி தெரியாமல் தர்ணாவில் ஈடுபடுகிறேன் என்றார்.

பின்னர் போலீசார் அங்கு வந்து அன்னபூரணியிடம் சமாதானம் பேசி திருமுருகன்பூண்டிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் வடக்கு மகளிர் போலீஸ் நிலைய வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்