பொள்ளாச்சி விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கியவர்: கரூர் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் நியமனத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

கரூர் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் நியமனத்துக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2019-07-16 22:15 GMT

மதுரை,

கரூரைச் சேர்ந்த ராஜேந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது–

கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த விக்ரமன், சமீபத்தில் சென்னை கணினி துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவர் கரூர் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியபோது கந்துவட்டி கொடுமைகளை கட்டுப்படுத்தியது, மணல் திருட்டை தடுத்தது, சட்டவிரோத புகையிலை மற்றும் போதை பொருட்கள் விற்பனையை தடுத்தது என கரூர் மாவட்டத்தில் பல்வேறு நல்ல மாற்றங்களை கொண்டு வந்தார். அவரை திடீரென இடமாற்றம் செய்தது அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு பின்னால் அரசியல் தலைவர்களின் வற்புறுத்தல் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் அவருக்கு பதிலாக பாண்டியராஜன் என்பவர் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானவர். குறிப்பாக பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணையை முறையாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு இவர் மீது வைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் கடந்த 2017–ம் ஆண்டு இவருக்கு கோர்ட்டு அபராதமும் விதித்துள்ளது. அதேபோல திருப்பூரில் டாஸ்மாக் கடைக்கு எதிராக அமைதியான முறையில் போராடிய பெண் ஒருவரின் கன்னத்தில் இவர் அறைந்ததால் சர்ச்சையில் சிக்கியவர்.

துணை போலீஸ் சூப்பிரண்டு ஒருவர், பல குற்றச்சாட்டுகளுடன் 13 ஆண்டுகளாக கரூர் மாவட்டத்திலேயே பணியாற்றி வருகிறார். ஆனால் நல்ல முறையில் பணியாற்றி, பல நல்ல மாற்றங்களை கொண்டு வந்த போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன், அரசியல் உள்ளிட்ட பல காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனை ஏற்க இயலாது. எனவே அவரை இடமாற்றம் செய்த உத்தரவை திரும்பப்பெற உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. முடிவில், இந்த மனுவை பொதுநல வழக்காக தாக்கல் செய்ய முடியாது என்று கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், 2013–ம் ஆண்டின் தமிழ்நாடு போலீஸ் சீர்திருத்தச்சட்டத்தை அமல்படுத்தியது குறித்து தமிழக டி.ஜி.பி. பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்