சமயபுரம் அருகே 100 நாள் வேலை கேட்டு சாலை மறியல் பெண்கள் உள்பட 81 பேர் கைது

சமயபுரம் அருகே 100 நாள் வேலை கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 81 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-07-16 22:15 GMT
சமயபுரம்,

லால்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது, மாடக்குடி ஊராட்சி. இந்த ஊராட்சியை சேர்ந்த ஏழை-எளிய மக்கள் தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை செய்து வந்தனர். தற்போது அவர்களுக்கு பணி எதுவும் ஒதுக்கப்படவில்லை. இதனால் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். தங்களுக்கு 100 நாட்கள் வேலை ஒதுக்கி தரும்படி மாடக்குடி ஊராட்சி செயலாளரிடமும், லால்குடி வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அந்த மனுமீது நடவடிக்கை எடுக்கபடவில்லை என்றால், நேற்று மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், அவர்களை அழைத்து அதிகாரிகள் யாரும் பேச்சு வார்த்தை நடத்தாததால் நேற்று காலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகே உள்ள பள்ளிவிடை என்ற இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஜெயசீலன் தலைமையிலும், மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் கனகராஜ் முன்னிலையிலும், பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

81 பேர் கைது

தகவல் அறிந்த லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகர், சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட 75 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் பேரூராட்சி மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்