குடிநீர் வழங்கக்கோரி முத்துப்பேட்டை ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை

குடிநீர் வழங்கக்கோரி முத்துப்பேட்டை ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-17 23:00 GMT
முத்துப்பேட்டை,

முத்துப்பேட்டை அருகே உள்ள குன்னலூர் ஊராட்சி பன்னைப்பொது வடக்கு கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு குன்னலூரில் உள்ள கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வந்து கொண்டிருந்தது. இந்தநிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக சரிவர குடிநீர் வருவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மேலும் இப்பகுதி மக்கள் குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் சென்று தண்ணீர் எடுத்து வரும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு அவதியடைந்தனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாகம் ஆகியவற்றின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம பெண்கள் குடிநீர் வழங்க வலியுறுத்தி நேற்றுமுன்தினம் காலிக்குடங்களுடன் முத்துப்பேட்டை ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தி.மு.க. தொண்டரணி நிர்வாகி முத்துமாணிக்கம் தலைமை தாங்கினார். அதனை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலரின் அலுவலக வாசலில் அமர்த்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் பக்கிரிசாமி சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் 2 நாட்களில் பன்னைப்பொது பகுதிக்கு தினமும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். இதனையடுத்து கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்