மரக்காணம் அருகே, கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் - கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது

மரக்காணம் அருகே கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.

Update: 2019-07-17 22:30 GMT
விழுப்புரம்,

விழுப்புரம், திண்டிவனம் நகராட்சி மற்றும் மரக்காணம், விக்கிரவாண்டி, வானூர், மயிலம், காணை ஒன்றிய பகுதி கிராம பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 1,000 கோடி ரூபாய் செலவில் மரக்காணம் அடுத்த கூனிமேடு கிராமத்தில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த அனைத்துத்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குனர் நிர்மல்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் சுப்பிரமணியன் பேசியதாவது:-

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு குடிநீர் முதலீட்டு நிறுவனம் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கூனிமேடு கடல் பகுதியை ஆய்வு செய்யவேண்டும். கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்க விரிவான திட்ட மதிப்பீடு தயாரித்தல் போன்ற பணிகளை விரைந்து முடிக்கவேண்டும். மேலும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைப்பதன் அவசியம் குறித்தும், அனைத்து அலுவலர்களும் களப்பணியை மேற்கொள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நியமித்துள்ள தமிழ்நாடு குடிநீர் முதலீட்டு நிறுவனத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் சுப்பிரமணியன் பேசினார்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், தமிழ்நாடு குடிநீர் முதலீட்டு நிறுவன தலைமை நிர்வாக அலுவலர் அசோக் நடராஜன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் சுசீலா, மரக்காணம் தாசில்தார் தனலட்சுமி மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்