திருவள்ளூரில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

திருவள்ளூரில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

Update: 2019-07-17 22:45 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை நேற்று திருவாலங்காடு ஒன்றியம் ராஜபத்மாபுரம் இருளர் காலனி பகுதியை சேர்ந்த திரளான இருளர் இன மக்கள் திருவள்ளூர் மாவட்ட இருளர் முன்னேற்ற சங்க நிறுவனர் பிரபு தலைமையில் முற்றுகையிட்டு கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

அப்போது அவர்கள் கூறியதாவது:–

நாங்கள் திருவாலங்காடு ஒன்றியம் ராஜபத்மாபுரம் இருளர் காலனியில் வசித்து வருகிறோம். எங்களுக்கு கடந்த 2011–ம் ஆண்டு அரசு மூலம் இலவச பட்டா வழங்கப்பட்டது. மேலும் எங்களுக்கு சரியான முறையில் குடிநீர் வினியோகம், தெருவிளக்கு வசதி, சாலை வசதி, அரசு வழங்கும் இலவச தொகுப்பு வீடுகள் என எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை.

இது குறித்து நாங்கள் பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நாங்கள் எந்த ஒரு அரசின் சலுகைகளை பெற முடியாமல் பாதிக்கப்பட்டு வருகிறோம். எனவே மாவட்ட கலெக்டர் எங்கள் மனு மீது தக்க நடவடிக்கை எடுத்து எங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என முறையிட வந்ததாக தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்